அந்நிய செலாவணி ஈட்டி தரும் முந்திரி: பண்ருட்டியில் இருந்து 500 மெட்ரிக் டன் ஏற்றுமதி

இந்தோனேசியா, வியட்நாம், ஆப்பிரிக்கா, பிரேசில் அதிகளவில் முந்திரி விளைகிறது. உலகிலேயே 80 சதவீதம்  முந்திரிஆப்பிரிக்காவில்தான் விளைகிறது. முந்திரி கொட்டைகள் உடைத்து தரம் பிரிக்கும் நிறுவனங்கள் கன்னியாகுமரி மற்றும் பண்ருட்டியில் அதிக அளவில் இயங்குகின்றன. இங்கிருந்து மாதந்தோறும் 500 மெட்ரிக் டன் அளவுக்கு முந்திரி பருப்புகள் ஏற்றுமதியாகிறது. முந்திரி கொட்டையில் இருந்து பருப்புகளை தனியாக பிரித்தெடுத்து,  தரம்பிரித்து அனுப்பும் தொழிலில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் என  2 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.

இதன்மூலமாக மத்திய அரசுக்கு அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கிறது. ஒன்றிய அரசு முந்திரி வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கு ஊக்க தொகை 5 சதவீதம் கொடுத்தது. தற்போது 2 சதவீதம் மட்டும் தருகிறது. இதனை உயர்த்தி மீண்டும் 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்பது முந்திரி வியாபாரிகளின் கோரிக்கையாகும். உள்ளூர் பகுதியில் பொருள் மற்றும் உற்பத்திக்கு அதிக வரி விதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் செஸ்வரி ஒரு சதவீதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது முந்திரி முகவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதே நேரத்தில் முந்திரி கொட்டைகளை இருப்பு வைக்க அதிக அளவு குடோன்கள் அமைத்து கொடுத்தால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தற்போது சிங்கப்பூர், மலேசியா, சவுதி, துபாய் ஆகிய பகுதிகளுக்கு முந்திரி பருப்புகள் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. முந்திரி தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு பெயிண்ட் தயாரிக்கவும் உதவுகிறது. பிரேக் ஆயில், வார்னிஷ் உள்ளிட்ட 50 வகையான பொருள்களுக்கு மூலப் பொருளாக பயன்படுகிறது.முந்திரி புண்ணாக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அதிக நெருப்பை கொடுக்கும் எரி பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி முந்திரியின் மூலம் கிடைக்கும் உப தொழில் மூலமாகவும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். சிறுவர் முதல், பிரபல அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலர்  பண்ருட்டி முந்திரியா என கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சிறப்பினை பெற்றுள்ளது.பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், விசூர், கருக்கை உள்பட பல்வேறு கிராமங்களில் செம்மண் பூமி என்பதால் முந்திரி, பலா விவசாயம் அதிக அளவில் நடக்கிறது.

மத்திய அரசிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணி ஈட்டி தரும் இந்த தொழிலுக்கு ஒன்றிய, மாநில அரசுகளில்  மேலும் சலுகைகள் வழங்கலாம் முந்திரியின் பழத்தில் எரிபொருள் தயாரித்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு முன் வைத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

Related Stories: