ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் வங்கதேச ஆடைகள் இறக்குமதி அதிகரிப்பு; டல் அடிக்கும் டாலர் சிட்டி: பனியன் தொழில் உற்பத்திக்கு மூடுவிழா

*ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம்
தினமும் ரூ.100 கோடி முதல் பல ஆயிரம் கோடி ஆடைகள் ஏற்றுமதி
* பனியன் தயாரிப்பில் 10 லட்சம் தொழிலாளர்கள்

சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதி திருப்பூர். இப்பகுதி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும், ஒரு முக்கிய ரோமானிய வர்த்தக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது.இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் ஓர் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. ஆடைகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து, அந்நிய செலாவணி ஈட்டுவதில் திருப்பூர் முக்கிய பங்கு வகிப்பதால் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். ஆனால், ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் (ப்ரீ டிரேட்) காரணமாக உற்பத்திகள் முடங்கி டாலர் சிட்டி டல் சிட்டியாக மாறி தொழில்துறையினர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பனியன். திருப்பூரில் இருந்து தினமும் ₹100 கோடி முதல் பல ஆயிரம் கோடி வரை ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் ஆண்டுக்கு ₹30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது. இதனால் திருப்பூரை டாலர் சிட்டி என்று அழைப்பார்கள். திருப்பூரில் ஆண்டு முழுவதும் ஆடைகள் தயார் செய்யப்படுகின்றன. குளிர் மற்றும் கோடை காலங்களுக்கு ஏற்ற வகையிலான ஆடைகள் சீசனுக்கு தகுந்தார்போல் தயாரிக்கப்படுகிறது. குறுகிய கால சீசன்களின் அடிப்படையிலும் ஆடைகளை பனியன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த பனியன் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இவர்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், 8 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர். இதன் காரணமாக திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களாகவே காட்சியளித்தன. வர்த்தகமும் நன்றாக சென்று கொண்டிருந்தது. அன்னிய செலாவணியும் அதிகமாக பனியன் தொழில் ஈட்டிக்கொடுத்து வந்தது.

ஆனால் எப்போது வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இந்தியாவுக்குள் எந்தவித வரிவிதிப்பும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டதோ அன்றிலிருந்து பனியன் தொழில் பாதிக்க தொடங்கிவிட்டது. இறக்குமதி தொடர்ந்து அதிகரித்ததின் விளைவாக திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சிறப்பு குழுவை அமைத்து, அதிக வர்த்தக தொடர்புடைய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இருநாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்த வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்துள்ளது. வங்கதேசத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலமாக வரியில்லாமல் வங்கதேசத்தில் தயாரிக்கும் ஆடைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய முடியும்.

கடந்த 2012ம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவிடம் நூல் கொள்முதல் செய்யும் வங்கதேசம், துணிகளையும், ஆடைகளையும் தயாரித்து மீண்டும் வரிச்சலுகையுடன் இந்தியாவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடைகளைவிட, கிலோவுக்கு ₹50 குறைவாக வங்கதேச ஆடைகள் விற்பனையாகிறது. இந்தியாவில் விளைவிக்கப்பட்ட பருத்தி பஞ்சு, வரியில்லாமல் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவை ஆடைகளாக மாறி, வரியில்லாமல் மீண்டும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படுகிறது. வங்கதேசம் இந்தியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதுபோல் சீனாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேசத்திடம் இருந்து துணியை இறக்குமதி செய்து, ஆடையாக வடிவமைத்து வங்கதேசம் வழியாக சீனா இறக்குமதி செய்கிறது. இவ்வாறு வங்கதேசம், சீனா ஆடைகளின் இறக்குமதி இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்ததின் விளைவு உள்நாட்டு வியாபாரம் நலிவடைய தொடங்கியிருக்கிறது. அதுபோல் ஏற்றுமதி வர்த்தகத்திலும் இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்தியா – வங்கதேசத்துக்கு இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ததும், உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பியதால் ஜவுளி இறக்குமதியை கட்டுப்படுத்த, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஆடைகளை இறக்குமதி செய்யும்போது கவுண்டர்வெய்லிங் என்ற பெயரில் 12.6 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது. தொடக்க காலத்தில் இறக்குமதி குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதும் ஏற்கனவே உள்ள வரி நீக்கப்பட்டது. அதனால் வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதி இந்தியாவில் மேலும் தீவிரமாகிவிட்டது.

வங்கதேசத்தில் இருந்து வரிச்சலுகையுடன் ஆடைகளை இறக்குமதி செய்யும்போது இந்தியாவில் தயாரிக்கும் ஆடைகளைவிட ₹15 முதல் ₹20 வரை விலை குறைவாக உள்ளது. இதனால் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் உள்நாட்டு பனியன் வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. உள்நாட்டு ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டை ஆடை விற்பனையின்றியும், வர்த்தகர்கள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது. பலர் கடைகளுக்கு வாடகை கொடுக்காமல் கடைகளை காலி செய்துவிட்டனர்.

இதனை தடுக்க ஒன்றிய அரசு வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கையாக உள்ளது. இன்னமும் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றால் தொழில்துறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்துவது அவசியம். பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்நாட்டு பனியன் வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நலிவுக்கு மோடியே காரணம்
நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி கூறியதாவது: ஒரு காலத்தில் திருப்பூருக்கு வந்தால் வேலை உறுதியாக கிடைக்கும் என்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் இன்றோ, திருப்பூரின் தொழில் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு நலிவடைந்ததால், திருப்பூரில் ஆட்கள் தேவை என்ற பதாகைகளுக்கு பதிலாக வாடகைக்கு விடப்படும் என்ற பதாகைகளைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நலிவிற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி ஆகும் ஆயத்த ஆடைகள்தான்.

வங்கதேசத்துடன் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு போட்டிருந்தாலும் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதம் கவுண்டர் வெயிலிங் வரி போட்டிருந்தார். தற்போதைய பாஜ ஆட்சியில் 2017ம் ஆண்டு அந்த வரியை நீக்கிவிட்டார் மோடி. அதனால் 2017லிருந்து இன்று வரை சுமார் ₹8,500 கோடி மதிப்பிற்கும் மேலான ஆடைகள் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதி நேரடியாக திருப்பூரின் தொழிலை பாதிக்கிறது. இது பற்றி ஏறத்தாழ அனைத்து சங்கங்களும் பல முறை முறையிட்டும் தனது கார்ப்பரேட் நண்பர்களின் நலன் கருதி செவி சாய்க்கவில்லை மோடி அரசு. அதனால் திருப்பூரின் தொழில் நலிவிற்கு பிரதமர் மோடியே நேரடியான காரணம் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

20 சதவீதம் நூல் மில்கள் மூடல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகி லெனின் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து இதுவரை பல கோடி ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள பனியன் தொழில் சரிவை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை. இதுபோல் பஞ்சு பதுக்கலையும் தடுக்கவில்லை. இதனால் சீரான விலை இல்லை. நூல் விலை அடிக்கடி உயர்ந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் வேறு நாடுகளுடன் போட்டியிட முடியவில்லை. அடிக்கடி விலை ஏற்றம் ஏற்பட்டதால் 20 சதவீதம் நூல் மில்கள் மூடப்பட்டுள்ளன. நூற்பாலைகள் 3 ஷிப்டுகள் இயங்கி வந்தது. தற்போது 2 ஷிப்டு இயங்குகிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இதனால் நூற்பாலை உரிமையாளர்கள் கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனை வெளியே தெரிவிக்கவும் முடியாமல் தவித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு இந்த பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் வங்கதேச ஆடைகள் இறக்குமதி அதிகரிப்பு; டல் அடிக்கும் டாலர் சிட்டி: பனியன் தொழில் உற்பத்திக்கு மூடுவிழா appeared first on Dinakaran.

Related Stories: