ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்ப ஆய்வகம்: செவித்திறன் குறைபாடுடைய 31 பேருக்கு நேர்காணல் மூலம் வேலை

* சிறப்பு செய்தி
சென்னையின் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத மெரினா கடற்கரை எதிரே அமைந்துள்ளது பழமை மிகு மாநிலக் கல்லூரி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி. ஆயிரக்கணக்கான சான்றோர்களையும் ஆய்வறிஞர்களையும், அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கி சென்னையின் பாரம்பரியமான அடையாளங்களில் ஒன்றாக கல்லூரி திகழ்கிறது. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் முனைவர் எஸ்.சந்திரசேகர் போன்ற ஆளுமைகள் பணியாற்றிய கல்லூரி இது. நோபல் பரிசுக்கு இணையாக ஏபல் பரிசு பெற்ற எஸ்.ஆர்.சீனிவாச வரதன், பாரத ரத்னா விருது பெற்ற மூதறிஞர் ராஜாஜி மற்றும் சுப்ரமணியம் போன்ற அறிஞர்கள் பலரும் இங்கே பயின்றவர்களே. உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரனார் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றியுள்ளனர். மகாகவி பாரதியார், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோர் கல்லூரியில் உரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

மேலும் திராவிட இயக்க மூத்த முன்னோடிகளான சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில் (1972-75ல்) பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாட்டின் மூன்றாவது சிறந்த உயர்கல்வி நிறுவனமாக சென்னை மாநில கல்லூரி இடம்பிடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

இந்த கல்லூரியில் பல்வேறு துறைகள் இருந்தாலும், காது கேளாதோர் மற்றும் பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான பட்டப் படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளங்கலை பட்டப் படிப்புகளில் பி.காம்., பி.சி.ஏ.வில் இவர்களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இளங்கலைப் படிப்புகளை முடித்து, முதுகலைப் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பும் 2022-23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென்றே பிரத்யேக விடுதியும் இங்கு உள்ளது. தமிழ்நாட்டிலேயே அரசு உதவியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்தப்படிப்புகளை பயில்வது இங்கு மட்டும் தான்.

இந்த மாணவர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், செவித்திறன் மற்றும் பார்வை திறன் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 20 கிலோ வாட் சூரிய சக்தியால் இயங்கும் உதவி தொழில்நுட்ப ஆய்வகம் ஒன்றும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கி மென் பொருள் நிறுவனம் ஒன்று சமூக சேவையின் ஒரு பகுதியாக இதனை அமைத்துக் கொடுக்க கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்தார்.

முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே செயல்படும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட அதி நவீன கம்ப்யூட்டர்கள், ஸ்கிரீன் ரீடர்கள், கீ போர்ட், அதிவேக இன்டெர்நெட் ஆகியவை இந்த ஆய்வகத்தில் உள்ளது. மாணவர்கள் தினம் 5 மணி நேரம் இங்கு செலவழிப்பதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த படிப்புகளில் சேர்ந்து கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 3ம் தேதி கல்லூரிகளில் பி.காம்., பி.சி.ஏ. படித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவ-மாணவிகளுக்கு வளாகத்திலேயே வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தியது. இதில் 13 மாணவர்கள், 18 மாணவிகள் என மொத்தம் 31 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். ‘5கே கார்’ என்ற தனியார் நிறுவனம் இந்த 31 பேரையும் பணிக்காக தேர்வு செய்து இருக்கிறது. இவர்கள் 31 பேருக்கும் தனியார் நிறுவனம் சைகை மொழி மூலம் பயிற்சி அளித்து பின்னர், அவர்களுடைய 186 கிளைகளில், ஏதாவது ஒன்றில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சிறப்பான வழியில் ஆங்கில பயிற்சி
வேலைவாய்ப்பு பெற்ற ஹரிஷ் மற்றும் வீர மணிகண்டன் கூறியதாவது: எங்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்தவர்கள். நாங்கள் பள்ளி படிப்பை முடித்ததும் எங்கு சென்று உயர்க்கல்வியை தொடர்வது என யோசித்தோம். அப்போதுதான் ஊக்கத்தொகையுடன் மாநிலக் கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதை அறிந்து நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தோம். 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில்தான் படித்தோம். இங்கு வந்த பின் சிறப்பான வழியில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தனர். தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற ஆய்வகங்கள் இருக்கலாம். ஒரு அரசுக் கல்லூரியில் இதுபோன்ற நவீன ஆய்வகங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைப்பது அரிது. நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற தைரியத்துடன் படித்து வேலையும் கிடைத்துவிட்டது. இருவருக்குமே அப்பா இல்லை. அம்மாதான் பார்த்துக் கொண்டார். இனி நாங்கள் அவர்களை பார்த்துக்கொள்வோம். சம்பளம் குறைவு என்றாலும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்ப ஆய்வகம்: செவித்திறன் குறைபாடுடைய 31 பேருக்கு நேர்காணல் மூலம் வேலை appeared first on Dinakaran.

Related Stories: