எரியிற வீட்ல பிடுங்குற வரைக்கும் லாபம் நஷ்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் அடித்து பிடுங்கிய பாஜ: தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்கள் அம்பலம்

மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மாபெரும் ஊழல் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதல் கூறி வந்தன. ஆனால், அதை காது கொடுத்து கேட்டு, அந்த திட்டத்தின் உண்மைத்தன்மையை ஆராயத் தான் பெரும்பாலானோர் தயாராக இல்லை. 2018ல் தேர்தல் பத்திர திட்டம் துவங்கியதில் இருந்தே அதில் அதிகம் கல்லா கட்டத் துவங்கியது ஒன்றியத்தில் ஆளும் பாஜ தான். எஸ்.பி.ஐ வங்கியிடம் இருந்து யார், எந்த நிறுவனம்? எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்று கேட்டால் அது ரகசியம் என்ற பதில்தான் வந்தது.

அந்த தேர்தல் பத்திரங்கள் எந்த கட்சிக்கு போனது என்ற தகவலும் வெளிவராது. ஆனால், இந்த மூடு மந்திரம் எல்லாம் எதிர்கட்சியினருக்கும், மிஸ்டர் பொதுஜனத்துக்கும் மட்டும்தான். மொத்த விவரமும் ஆளும் பாஜவுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருந்தது. தேர்தல் பத்திரங்கள் பற்றிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக அளித்த தீர்ப்பு பாஜ தலைமையின் அடிவயிற்றை கலங்கச் செய்தது உண்மை. தேர்தல் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட கட்சிகள் பற்றி முழு விவரத்தையும் வெளியிட எஸ்.பி.ஐ வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

தனது எஜமானர்களின் தூண்டுதலின்பெயரில் விவரங்கள் வெளியிடுவதை தாமதப்படுத்த எஸ்.பி.ஐ முயற்சிக்க, உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து குட்டு வைத்ததும் விவரங்கள் 2 கட்டங்களாக வெளிவந்தது. தேர்தல் பத்திர வசூலில் முதலிடம் ஆளும் பாஜவுக்குதான். மொத்தம் ரூ.8250 கோடியை பாஜ மட்டும் வசூலித்திருந்தது. மற்ற கட்சிகளுக்கு குறைவான தொகையே தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருந்தது. நிதி கொடுத்த நிறுவனங்கள், அதை பெற்ற கட்சிகள் பற்றிய விவரங்களை நிபுணர்கள் ஆராய்ந்தபோது, பாஜவுக்கு மட்டும் இவ்வளவு நிதியை குவித்து கொடுத்து அதன் குடும்பமாகவே மாறிவிட்ட ஈடி, சிபிஐ, ஐடிதான் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

பாஜவுக்கு நன்கொடை தந்த நிறுவனங்கள், ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளின் ரெய்டை தொடர்ந்து அடுத்த சில வார, மாத இடைவெளியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அம்பலமானது. அதேபோல், டெண்டர், கான்டிராக்ட் பெறுவதற்காக நன்கொடை கொடுத்த விவரமும் வெளியானது. தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை ஆராய்ந்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எரியுற வீட்ல பிடுங்குற வரைக்கும் லாபம் என்று, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களிடம் பாஜ அடித்து பணம் பிடுங்கியதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.

பாஜவுக்கு நன்கொடை கொடுத்த நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்குபவை 33. அதில் நம்பர் 1 இடத்தில் இருப்பது பார்த்தி ஏர்டெல் நிறுவனம். கடந்த 2017 முதல் 2023 வரை பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.76,954 கோடி . ஆனால், அந்த நிறுவனம் மொத்தம் ரூ.198 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில், 99.7 சதவீதம் பத்திரங்களை பெற்றது பாஜ. இரண்டாவது இடத்தில் அனல் மின் நிலையங்களை நடத்தும் தாரிவால் இன்ப்ராஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நஷ்டம் ரூ.299 கோடி, ஆனால், அந்த நிறுவனம் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ. 115 கோடி.

இதேபோல் 2017 முதல் 2023 வரை சம்பாதித்த லாபத்தைவிட அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள் 6. இதில் முக்கியமானது குயிக் சப்ளை செயின் நிறுவனம். இந்த நிறுவனம் ரிலையன்ஸ் அம்பானியோடு தொடர்புடைய நிறுவனம் என்று கூறப்படுகிறது. மொத்தம் ரூ. 410 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிய இந்த நிறுவனம் அதில் ரூ.385 கோடியை பாஜவுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தது. ரூ.2.07 கோடி லாபம் சம்பாதித்த மதன்லால் நிறுவனம் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ. 185 கோடி. இந்த நிறுவனங்களிடம் இருந்து 90 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை பெற்றது பாஜதான்.

இதே போல் ஒன்றிய அரசுக்கு நேரடி வரி செலுத்தும் அளவுக்கு கூட வருவாய் இல்லாமல் இருக்கும் 3 நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன. இப்படி, நஷ்டத்தில் மூழ்கும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கி பாஜவுக்கு அதை கொட்டி கொடுத்தது ஏன்? அது அதட்டி, உருட்டி, ரெய்டு நடத்தி, கான்டிராக்ட் ஆசை காட்டி பறிக்கப்பட்ட தொகைதான் என்று கூறப்படுகிறது. இவ்வளவு நடந்த பிறகும், தேர்தல் பத்திர திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்காதது போலவே பாஜ நடந்து கொள்கிறது. ஆனால், தேர்தல் பத்திர ஊழல் வாக்காளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பாஜவுக்கு எதிராக பெரிய அலையாக மாறி வருகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

2017 முதல் 2023 வரை நஷ்டத்தில் மூழ்கினாலும்
பாஜவுக்கு நிதி தந்த டாப் 5 நிறுவனங்கள்
கம்பெனி வாங்கிய
தேர்தல் பத்திரம் பாஜ
பெற்றது நஷ்டம்
பார்த்தி ஏர்டெல் ரூ.198 கோடி 99.7% ரூ.-76954 கோடி
டிஎல்எப் லக்சரி ஹோம்ஸ் ரூ.25 கோடி 100% ரூ.-128 கோடி
எஸ்டி கார்ப்பரேஷன் ரூ.17 கோடி 100% ரூ.-10 கோடி
யூஜியா பார்மா ரூ.15 கோடி 100% ரூ.-29 கோடி
சாடெக் என்வைரோ ரூ.12 கோடி 100% ரூ.-146 கோடி
லாபத்தை விட அதிக நன்கொடை தந்த நிறுவனங்கள்
கம்பெனி வாங்கிய
தேர்தல் பத்திரம் பாஜ
பெற்றது லாபம்
குயிக் சப்ளை செயின் ரூ.410 கோடி 93.9% ரூ.144 கோடி
மதன்லால் ரூ.1885 கோடி 94.6% ரூ.2.07 கோடி
நெக்ஸ்ஜி ரூ.35 கோடி 100% ரூ.28 கோடி.

* நஷ்டத்தில் இருந்தாலும் நிதி தந்தவை 33
* லாபத்தைவிட அதிக நிதி தந்தவை 6

The post எரியிற வீட்ல பிடுங்குற வரைக்கும் லாபம் நஷ்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் அடித்து பிடுங்கிய பாஜ: தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: