சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டில் ரூ.1,530 கோடி சொத்து வரி வசூல்: ரயில்வே துறை 40 கோடி வரை பாக்கி; ஒன்றிய அரசு கோடிக்கணக்கில் நிலுவை

* சிறப்பு செய்தி
சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டில் ரூ.1,530 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இந்த வருவாய் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து அரையாண்டுக்கு ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998ன் படி, சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். அவ்வாறு சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக். 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் பல பெரிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இவ்வாறு செலுத்த தவறியவர்களுக்கும் சென்னை மாநகராட்சி சலுகை வழங்க தயாராக உள்ளது. ஆனால், பெரிய நிறுவனங்கள் இதுகுறித்து நீதிமன்றங்களில் முறையிடுகின்றன. இதனால் இன்னும் சில காலம் தாமதம் ஆகிறது. இது போன்று நீதிமன்றங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இது வரை சுமார் ரூ.1,530 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.200 கோடி வர வேண்டியுள்ளது. சென்ற ஆண்டு ரூ.1500 கோடி சொத்துவரி வசூலானது. இந்த முறை கூடுதலாக வசூலாகியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பல பெரிய நிறுவனங்கள் மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளது. இதில் ஒன்றிய,மாநில அரசுகளும் அடங்கும். அதில் குறிப்பாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சுமார் ரூ.20 கோடியும், ஒன்றிய அரசின் ரயில்வே துறை ரூ. 40 கோடி,பிஎஸ்என்எல் சுமார் ரூ.65 லட்சமும் பாக்கி வைத்துள்ளது.

இதே போல் பல துறைகள் கோடிக்கும் அதிகமாக பாக்கி வைத்துள்ளன. மேலும் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளது. மாநகராட்சி சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம்.

‘நம்ம சென்னை’, பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள க்யூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம். இதற்கு முன்பு வரை, சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்த தவறினால், அபராதமாக மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். தவிர, இதற்கு முன்பு, எந்த சொத்துக்கு வரி கட்டவில்லையோ, அந்த சொத்தை மட்டும்தான் ஜப்தி செய்ய முடியும். புதிய சட்ட விதிகளின்படி, இனி, உரிமையாளரின் எந்த சொத்தை வேண்டுமானாலும் ஜப்தி செய்ய முடியும். நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துகள் விரைவில் ஜப்தி செய்யப்பட உள்ளன.

* வரி செலுத்த விழிப்புணர்வு
சொத்துவரி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம், முக்கிய இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு உள்ளிட்டவை செய்யப்படுகிறது. மேலும், சொத்து உரிமையாளர்கள் எளிதாக சொத்து வரியை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

* ஜப்தி நடவடிக்கை
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத உரிமையாளர்களின் சொத்தை ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். கடந்த மாதம் சென்னை பாரிமுனை அருகே ஒன்றிய அரசின் சென்னை துறைமுக நிர்வாகம், ரூ.12.5 கோடி வரிபாக்கி வைத்திருந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக முகப்பில் நோட்டீஸ் ஒட்டினர். இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது ஒன்றிய அரசு சார்பில்வரி பாக்கியை செலுத்தவுள்ளனர்.இது போன்று மாநகராட்சியின் பல அதிரடி நடவடிக்கையால் சொத்து வரியை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் சொத்து வரி நிலுவையை செலுத்தியுள்ளன.

The post சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டில் ரூ.1,530 கோடி சொத்து வரி வசூல்: ரயில்வே துறை 40 கோடி வரை பாக்கி; ஒன்றிய அரசு கோடிக்கணக்கில் நிலுவை appeared first on Dinakaran.

Related Stories: