இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை; 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை: அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிப்பால் பீதி

சிறப்பு செய்தி
சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் கடந்த 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேலான மற்றும் ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தரப்பட்டுள்ளன. போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டம் ஒழுங்கு சீரடைந்துள்ளதோடு, ரவுடிகளுக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

ரவுடிகளின் செயல்பாடுகள் வளர்ந்து வரும் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் இடையூறு ஆகும். தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி ரவுடிகளின் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பல்முனை நடவடிக்கைகளால் தமிழகத்தில் ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறையின் அடிப்படை நடவடிக்கைகளான வழக்குப் பதிவு செய்தல், புலன் விசாரனை மற்றும் நீதிமன்ற விசாரணை போன்றவைகளில் கவனம் செலுத்தப்பட்டு ரவுடிகளுக்கு எதிராக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு ரவுடிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், பட்டியலிடப்பட்ட அனைத்து ரவுடிகளும் அவர்களின் சமூக விரோத செயல்களின் தீவிரத்தை கண்காணிப்பதற்காக ஏற்கனவே உள்ள தகவலுடன் அவர்களது சுயவிவரங்களை புதுப்பித்து மறுவகைப்படுத்தப்பட்டனர். அவர்களது குற்ற நடவடிக்கைகளின் தன்மைக்கேற்ப ரவுடிகள், தீவிர கண்காணிப்பு பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டனர். மேலும் ரவுடிகளாக இருந்து தற்போது செயலற்ற அல்லது குறைந்த செயல்பாடு உடைய ரவுடிகளை தீவிர கண்காணிப்பு வகையிலிருந்து விலக்குவதும் இதில் அடங்கும். முன்பு ரவுடிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஏபிளஸ் வகையில் 889 ரவுடிகள் தமிழகம் முழுவதும் இருந்தனர். அதைத் தொடர்ந்து ஏ பிரிவில் 2,031 பேர், பி பிரிவில் 5,531, சி பிரிவில் 19,215 பேர் இருந்தனர்.

போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், ஏபிளஸ் வகை ரவுடிகள் 421, ஏ பிரிவில் 836, பி பிரிவில் 6,398, சி பிரிவில் 18,807 என கணிசமாக குறைந்தது. பலர் ரவுடிகள் தொழிலை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். பலர் மாநிலம் விட்டே ஓட ஆரம்பித்தனர். இதனால் ஏ பிளஸ் மற்றும் ஏ பிரிவு ரவுடிகள் 50%க்கும் மேல் குறைந்துள்ளனர். இந்தத் தரவு மற்றும் ஆய்வு அடிப்படையிலான மறு வகைப்படுத்தல் காவல்துறைக்கு மிக முக்கியமான மற்றும் மோசமான ரவுடிகள் மீது கவனம் செலுத்த பெருமளவில் உதவியுள்ளது தெரியவந்துள்ளது. தீவிர கண்காணிப்பின் கீழ் பட்டியலிடப்பட்ட ரவுடிகளை கண்காணிக்க காவல் நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தைரியம் கொண்ட அதிகாரிகள் குறிப்பிட்ட ரவுடிகளின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்காக 546 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும், மாநகரத்திற்கும் ஒரு டிஎஸ்பி நிலை அதிகாரி தலைமையில் ஒரு ரவுடி கண்காணிப்பு குழு தேர்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்ட தீவிர குற்ற செயல்பாட்டில் உள்ள ரவுடிகளை இலக்கு வைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண்டல குழுக்களின் பணிக்காக விரிவான எஸ்ஓபி தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. மேற்படி குழுக்கள் ரவுடிகளுக்கு எதிராக நீதி விசாரணை மேற்கொள்ளுதல் (சொத்துக்கள் மற்றும் வருமான ஆதாரங்கள்). ரவுடி கும்பல் மற்றும் போட்டி கும்பல்களை கண்காணித்தல், நீதிமன்ற நிலுவை வழக்குகளில் ரவுடிகளின் வருகையை கண்காணித்தல் போன்ற முக்கிய உத்திகளில் இந்தக் குழு கவனம் செலுத்திவருகிறது.

ரவுடிகள் தொடர்புடைய நீதிமன்ற நிலுவை வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு அதில் விசாரணை முடிவுறும் தறுவாயில் உள்ள தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு உள்ள 188 வழக்குகள் அடையாளம் காணப்பட்டன. மேற்படி வழக்குகளில் ஒவ்வொரு விசாரணை தேதியிலும் வழக்கு முன்னேற்றத்தை உறுதி செய்வதில் மூத்த அதிகாரிகள் மற்றும் மண்டல ரவுடி கண்காணிப்புக் குழுவினர் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேலான மற்றும் ஆயுள் தண்டனை வரையிலான தண்டனைகள் பெற்றுத்தரப்பட்டுள்ளன.

மாநகரங்களில் துணை காவல் ஆணையர்கள் (தலைமையிடம்) மற்றும் மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையிடம்) ரவுடிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை விரைவாகக் கண்காணித்து தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் நீதிமன்ற பிணை நிபந்தனைகளை மீறும் போது ரவுடிகளுக்கு எதிரான நீதிமன்ற பிணையை ரத்து செய்யும் நடவடிக்கையின் கீழ் கடந்த 3 மாதங்களில் மட்டும் 51 நீதிமன்ற பிணை ரத்து உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. நீதிமன்ற பிணையில் வெளிவந்த பின்பு அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு இது தடையாக இருக்கும். ரவுடி சம்பந்தப்பட்ட கொலை வழக்குகளில் போலி குற்றவாளிகள் சரணடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக கொலை வழக்குகளில் குற்றவாளிகளின் தொடர்பைக் கண்டறிய வழிகாட்டு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப் பட்டுள்ளது.

தொடர் முயற்சியின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், கொலை செய்யப்பட்ட இடத்தைத் தவிர வேறு எந்த குற்றவியல் நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர் சரணடைவதற்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. பகைமை ரவுடி குழுக்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் கும்பல்கள் மற்றும் போட்டி கும்பல்கள், அவற்றின் முக்கிய உறுப்பினர்கள் மீது முந்தைய பகைமை, பழிவாங்கும் திட்டம் ஆகியவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உளவுத்துறை தகவல் உதவியுடன் தனியாக நியமிக்கப்பட்ட காவல் குழுக்கள், நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த 61 தீவிர ரவுடிகளைக் கைது செய்ததோடு நிலுவையில் உள்ள 86 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பிடியாணை நிலுவையில் இருந்தால், அவர்கள் பிணை பெற உதவிய ஜாமீன்தாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளுக்கு முக்கிய பின்புலமாக உள்ள நிதி ஆதாரங்களை கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கு உரிய விரிவான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 37 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரவுடிகளுக்கு எதிரான இந்த முறையான, கவனம் செலுத்தப்பட்ட மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளால், தமிழ் நாட்டில் ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க நல்ல பலனைத் தந்துள்ளன. ரவுடிகளை கட்டுப்படுத்த காவல் துறையின் அடிப்படை பணியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மோசமான ரவுடிகளுக்கு எதிரான தண்டனை பெற்றுத் தருவதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதன் ஒரு வெளிப்பாடாகும். இத்தகைய நடவடிக்கை நீண்ட காலத்திற்கு தண்டனை பற்றிய பயம் மற்றும் குற்றச்செயல் புரியும் எண்ணத்தை தடுக்கும் பெரிய தடையாக இருப்பதோடு ரவுடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்.

கொடூர குற்றவாளி பாயாசம் கைது
தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் கொடூர ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் ஒரு கட்டமாக தென் மாவட்டங்களை கலக்கி வந்த பிரபல ரவுடி பாயாசம்(எ) ஆறுமுகத்தைப் பிடிக்க தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். கொடூர குற்றவாளி என்பதால் அவரைப் பிடிக்க போலீசாரே பயந்தனர். இதனால் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். போலீசார் மீது வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு உள்பட பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் பாயாசம் மீது உள்ளன. கொடூர குற்றவாளியான பாயாசம் (எ)ஆறுமுகம், போலீசையே வெடிகுண்டு வீசி கொன்றதால், எப்போது வேண்டுமானாலும் போலீசாரை தாக்கலாம் என்று துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கமாக போலீசார் மீது தாக்குதல் நடத்தும் ரவுடி பாயாசம், தற்போது போலீசாரைப் பார்த்ததும் தன்னை சுட வேண்டாம் என்று கூறி சரணடைந்தார். பல ஆண்டுகளாக போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ரவுடி பாயாசம், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

* ரவுடிகளுக்கு எதிரான முறையான, கவனம் செலுத்தப்பட்ட மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளால், தமிழ் நாட்டில் ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க நல்ல பலனைத் தந்துள்ளன.
* ரவுடிகளை கட்டுப்படுத்த காவல் துறையின் அடிப்படை பணியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
* மோசமான ரவுடிகளுக்கு எதிரான தண்டனை பெற்றுத் தருவதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதன் ஒரு வெளிப்பாடாகும்.

The post இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை; 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை: அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிப்பால் பீதி appeared first on Dinakaran.

Related Stories: