தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்., தேர்வுகள் எட்டாக்கனியாக இருப்பதேன்? மொழி சமநிலை இல்லாததுதான் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்


இந்தியாவின் பொது நிர்வாகத்திலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1947ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள மெட்காப் ஹவுசில் முதல் பேட்ச் குடிமைப்பணி அதிகாரிகளிடையே உரையாற்றினார். அப்போது அந்த குடிமைப்பணி அதிகாரிகளை “இந்தியாவின் எஃகு சட்டகம்’’ என போற்றி வர்ணித்தார்.

அந்த உரையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 21ம்தேதி (இன்று) “தேசிய குடிமைப்பணிகள் தினம்’’ கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் முதல் முறையாக 2006ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேசிய குடிமைப்பணிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குடிமைப்பணிகள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போட்டித்தேர்வு பயிற்றுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால்? நான் கலெக்டர் ஆவேன் என்ற பதிலை பெரும்பாலான குழந்தைகள் சொல்வதை கேட்கலாம். அந்தளவிற்கு கலெக்டர் பதவியின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. நமது நாட்டில் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை உருவாக்குகிறார்கள்.

அதை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்ப்பதிலும், செயல்படுத்துவதிலும் குடிமைப்பணி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தகைய பணிகளை செவ்வேன செய்துவரும் குடிமைப்பணி அதிகாரிகளை ேபாற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகள் என்பது இந்தியாவில் மதிக்கப்படும் தேர்வுகளில் முதன்மையாக உள்ளது. இந்தியாவில் உள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றாக இதனை கூறலாம்.

இந்த குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற 21 வகையான பதவிகள் உள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத்த வரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிரம்பிய அனைவரும் தேர்வு எழுதலாம். ஓபிசி பிரிவினர் 9 முறையும், பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் 9 முறையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் சிவில் சர்விஸ் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

பணியாளர் தேர்வானது முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு செல்வார்கள். முதல்நிலைத்தேர்வு கொள்குறி அடிப்படையிலும், முதன்மைத்தேர்வு விரிவாக எழுதும் வகையிலும் அமைந்திருக்கும். முதன்மைத்தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இறுதி வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும். முதன்மைத்தேர்வில் 1750 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வில் 275 மதிப்பெண் என 2025 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். இந்தி மொழி அல்லாத தமிழ் உள்ளிட்ட தாய்மொழியைக் கொண்ட மாணவர்களுக்கு இத்தேர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளதை மறுக்க முடியாது. இதற்கு காரணம் மொழி சமநிலை என்பது இங்கு கானல் நீராகவே உள்ளது. சிவில் சர்வீஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளின் வினாத்தாளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்.

தமிழ் உள்ளிட்ட தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் கேள்விகளை தாய் மொழியில் உள்வாங்கி விடைகளை சிந்தித்து அதை ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலம் கற்ற மாணவர்கள் சிக்கல் இல்லாமல் இத்தேர்வை எளிதாக எதிர்கொள்கின்றனர். இங்கு மொழி சமநிலை என்பது இல்லாத நிலைதான் உள்ளது. இதன், காரணமாகவே தமிழகத்தில் இருந்து குடிமைப்பணித் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் வினாத்தாள்களை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் சென்னை கிரின்வேஸ் சாலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமானோர் படித்து பயன்பெற்று வருகின்றனர். இது குறித்த விழிப்புணர்வும் அதிகமாக வேண்டும்.மேலும் முக்கிய நகரங்களிலும் போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இதன் கிளைகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

* கரம் கொடுக்கும் அரசின் நான் முதல்வன் திட்டம்
தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு “நான் முதல்வன்’’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “போட்டித்தேர்வு பிரிவு’’ செயல்பட்டு வருகிறது.

இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி போட்டித் தேர்வுக்களுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.7500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

The post தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்., தேர்வுகள் எட்டாக்கனியாக இருப்பதேன்? மொழி சமநிலை இல்லாததுதான் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: