9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக பரிதவிக்க விட்ட பாஜ : நமத்துபோன பட்டாசு தொழில், பழிதீர்க்க தொழிலாளர்கள் ‘ஆவல்’

வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பட்டாசு தொழில்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 9 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாசு தொழில் கடந்த 10 ஆண்டுகளாக சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். ஆனால் இவற்றை சரி செய்ய ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

* 2014ல் சீன பட்டாசுகள்:
இந்தியாவில் சீன பட்டாசு விற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் சட்டவிரோதமாக 2014-2015 கால கட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் சிவகாசியில் சுமார் ரூ.1,000 கோடி அளவில் பட்டாசு தொழில் பெரும் சரிவை சந்தித்தது. தற்போது வரை இந்தியாவில் சீன பட்டாசு ஊடுருவல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கடந்த மாதம் மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் ரூ.3.6 கோடி மதிப்புள்ள 40 மெட்ரிக் டன் சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை முழுமையாக கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு உள்ளது.

* 2017ல் ஜிஎஸ்டி வரி:
ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஆடம்பர பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்க்கப்பட்டு, 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பட்டாசு தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஜிஎஸ்டியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்தது. 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை இன்றுவரை ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை.

* 2018ல் பேரியம் நைட்ரேட்:
நாடு முழுவதிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் 2018ல் உச்சநீதிமன்றம் பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கியது. சரவெடியை உற்பத்தி செய்யவோ, வாங்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்றும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பட்டாசு தயாரிப்பு பற்றிய அடிச்சுவடியே தெரியாத ஒன்றிய அரசு அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த ஞானத்தைக் கொண்டு நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என்றும், பட்டாசு தொழிலின் அடிப்படை தன்மையை அவர்கள் நீதிமன்றத்திற்கு சரியாக புரிய வைக்கவில்லை என்றும் ஆலை அதிபர்கள் குற்றம் சாட்டினர். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் ஆலை உரிமையாளர்கள் தற்போதுவரை சரவெடியை தயாரிக்க முடியாமல் உள்ளனர்.

* பசுமை பட்டாசு:
சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்க வலியுறுத்தி பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என அதே 2018ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ‘நீரி’ பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்கான பார்முலாவை அறிக்கையாக தயார் செய்து வழங்கவும் அறிவுறுத்தியது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஆயிரம் பட்டாசு ஆலைகளில் சுமார் 300க்கும் அதிகமான முன்னணி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போதுவரை பசுமை பட்டாசுகள் என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில்தான் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பசுமை பட்டாசு அனுமதிக்காக ஏராளமான பட்டாசு ஆலைகள் காத்திருக்கின்றன.

* 2020ல் வெடிக்க தடை:
காற்று மாசுபடுவதாகவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் கூறி 2020ம் ஆண்டு டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை செய்யப்பட்டது. இதனால் சுமார் ரூ.1,000 கோடி பட்டாசுகள் தேக்கமடைந்தன. கொரோனா முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை விலக்க ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஏக்கம் பட்டாசு ஆலை அதிபர்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது.

* கடும் அதிருப்தி:
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல்முனை தாக்குதலை சந்தித்து வரும் பட்டாசு தொழிலில் ஈடுபடுபவர்கள் மனத்தளர்ச்சி அடைந்துவிட்டனர். மேலும், ஒன்றிய அரசு சிறப்பு தொழில் கொள்கை எதுவும் அறிவித்து பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததால் இத்தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. பட்டாசு ஆலைகளை நடத்த முடியாமல் பலர் வீட்டு மனைகளாக பிரித்து பிளாட்டுகள் போட்டு, குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசியில் பட்டாசு தொழில் நசிந்து வருவதால் அதனை சார்ந்த துணை தொழில்களான அச்சுத் தொழில், ஸ்கோரிங், பஞ்சிங், பேக்கேஜிங், லேமினேசன், பேப்பர், அட்டை விற்பனை தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. அச்சக தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் அச்சு இயந்திரங்களை பலர் குறைந்த விலைக்கு பழைய இரும்புக் கடைகளில் போடும் அவல நிலை உள்ளது. இதனால் விரக்தியில் இருக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜ அரசுக்கு பாடம் புகட்ட தயாராக காத்திருக்கின்றனர்.

The post 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக பரிதவிக்க விட்ட பாஜ : நமத்துபோன பட்டாசு தொழில், பழிதீர்க்க தொழிலாளர்கள் ‘ஆவல்’ appeared first on Dinakaran.

Related Stories: