சோழவரம் ஒன்றியத்தில் நல்லூர், ஆங்காடு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

புழல்: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, நேற்று சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர், ஆங்காடு உள்பட பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவள்ளி டில்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராமசபை நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் தலைவர் கிரிஜா நித்தியானந்தம் தலைமையில் கிராமசபை நடைபெற்றது. இதில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு, மின்கம்பங்கள் சரிசெய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் தலைமையில் கிராமசபை நடந்தது. இதில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சற்குணம் தலைமையில் நடைபெற்ற கிராமசபையில் அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நிறைவேறியது.

புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சரவணன் தலைமையில் கிராமசபை நடந்தது. இதில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அந்த ஊராட்சியில் பனைவிதை நடவு பணியை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநர் அப்துல் ரசாக் பங்கேற்று துவக்கி வைத்தார்.

புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ், தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சன், வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன், கிராண்ட்லைன் ஊராட்சி தலைவர் கமுதிஅரசு, அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆஷா கல்விநாதன் ஆகியோர் தலைமையில் கிராமசபை நடந்தன. இதில் அடிப்படை வசதி, நலத்திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: