விடுமுறை தினம் என்பதால் குற்றாலம், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

*கடும் வெயிலை பொருட்படுத்தாமல் அருவியில் உற்சாக குளியல்

நெல்லை : விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் நிறைவடைந்த நிலையிலும் அருவிகளில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் ஒரு சில அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.

மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் குறைவாகவும், ஆண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், தென்காசி ஆர்.சி. புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களின் ராக் ஹால் பண்டிகை ஆகியவற்றின் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

   விகேபுரம்: பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில்  பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டுவது வழக்கம். இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து  மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலேயே  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  

   இதனால், அகஸ்தியர் அருவி பகுதி சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி  வழிந்தது. அவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில்  காத்திருந்து அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  இந்நிலையில் பயணிகளின் கூட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். அதே போன்று பாபநாசம் சோதனை சாவடியில் அனைத்து  வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அகஸ்தியர் அருவி செல்ல  அனுமதிக்கப்பட்டன.

 செங்கோட்டை: அச்சன்கோவிலில் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பாவுருட்டி அருவி அமைந்துள்ளது. கேரள வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் தேதி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கில் மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். இதையடுத்து அருவி தற்காலிகமாக மூடப்பட்டது. அருவியில் குளிக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு, வாக்கி டாக்கி வசதி, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு போன்ற வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு உயிர்காக்கும் கவசம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கும்பாவுருட்டி அருவியை திறப்பது தொடர்பாக கேரள வனத்துறை  சார்பில் கடந்த 1ம்தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் குளிக்க வரும்  பயணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள்  குறித்து விவரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் கும்பாவுருட்டி அருவி திறக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

சாலையை சீரமைக்க கோரிக்கை

பாபநாசம்  சோதனை சாவடியில் இருந்து அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் சாலை மிகவும்  மோசமான நிலையில் உள்ளது. ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை குண்டும்  குழியுமாக உள்ளது. இதனால் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த  சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் இந்த சாலையை  சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: