சுருண்டது தென் ஆப்ரிக்கா; முதல் டி20ல் இந்தியா வெற்றி: சூர்யகுமார், ராகுல் அரைசதம்

திருவனந்தபுரம்: முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். திருவனந்தபுரம் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் முதுகு வலியால் அவதிப்படும் பும்ராவுக்கு பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டார். ஹர்திக், புவனேஷ்வருக்கு ஓய்வளிக்கப்பட்டு பன்ட், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். சாஹலுக்கு பதிலாக ஆர்.அஷ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

டி காக், கேப்டன் பவுமா இருவரும் தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். தீபக் சாஹர் வேகத்தில் பவுமா டக் அவுட்டாகி வெளியேற, டி காக் 1 ரன் எடுத்து அர்ஷ்தீப் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரைலீ ரூஸோ, டேவிட் மில்லர், டிரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து கோல்டன் டக் அவுட்டாக, தென் ஆப்ரிக்கா 2.3 ஓவரில் 9 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்தது. அஷ்வின் - அக்சர் சுழல் கூட்டணியும் துல்லியமாகப் பந்துவீசி அசத்த, தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். ஓரளவு தாக்குப்பிடித்த எய்டன் மார்க்ரம் 25 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்ஷல் வேகத்தில் வெளியேறினார்.

வேய்ன் பார்னெல் 24 ரன் (37 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அக்சர் படேல் சுழலில் பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய கேஷவ் மகராஜ் தென் ஆப்ரிக்கா கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். அவர் 41 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்ஷல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. ரபாடா 7 ரன், அன்ரிச் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் 3, தீபக் சாஹர், ஹர்ஷல் படேல் 2, அக்சர் படேல் 1 விக்கெட் எடுத்தனர். அஷ்வின் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரபாடா வேகத்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோஹ்லி 3 ரன்னில், நோர்ட்ஜே பந்தில் ஆட்டமிழந்தார். 17 ரன்னில் 2 விக்கெட் இழந்த நிலையில், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். ஒருமுனையில் ராகுல் நிதானமாக ஆட, சூர்யகுமார் அதிரடியில் கலக்கினார். இந்த ஜோடி அசத்தலாக ஆட இந்திய அணி எளிதாக வென்றது. சூர்யகுமார் 33 பந்திலும், ராகுல் 56 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன் (33 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி), ராகுல் 51 ரன் (56 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: