கோழிக்கோடு மாலில் நடந்த நிகழ்ச்சியில் 2 நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: இவ்வளவு மோசமான நபர்களா? பேஸ்புக் பதிவில் நடிகை உருக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்து நட்சத்திரங்கள் மாலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலர் 2 இளம் நடிகைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார். அதில் கூறியிருப்பது:

கோழிக்கோட்டில் உள்ள மாலில் சினிமா பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன். அப்போது 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மாலின் முன்பு திரண்டிருந்தனர். எனக்கு கோழிக்கோடு மிகவும் பிடித்த இடமாகும். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மிகவும் அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடந்தது. என்னிடமும் உடன் வந்த இன்னொரு நடிகையிடமும் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். எனது உடலில் எந்த இடத்தில் அந்த நபர் தொட்டார் என்பது குறித்து என்னால் விவரிக்க முடியாது. சில வினாடிகள் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்னால் எதுவும் அப்போது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடன் வந்த நடிகை உடனே அந்த ரசிகரை திட்டினார். நம்மை சுற்றிலும் இவ்வளவு மோசமான நபர்களா உள்ளனர்? என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதன் மூலம் உங்களது அரிப்பு தீர்ந்து விட்டதா?இவ்வாறு பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையின் இந்த பேஸ்புக் பதிவு மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகைகள் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. ஆனாலும் பேஸ்புக்கில் நடிகை குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கடந்த வருடம் கொச்சியில் ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியின்போதும் மலையாள இளம் நடிகையிடம் பாலியல் சீண்டல் நடந்தது. அப்போது அந்த நடிகை சம்பவம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து மலப்புரத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Related Stories: