டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் மோசடி; கிருஷ்ணகிரி, தர்மபுரியில் 8 இடங்களில் சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 6 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (46). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9ம் தேதி இவரது தலைமையில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் பிரகாஷ் கூறியிருப்பதாவது: யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி வந்த ஓசூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த அருண்குமார், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் நந்தகுமார், மத்தூர் அருகே உள்ள கிட்டனூரைச் சேர்ந்த சங்கர், பிரகாஷ், பர்கூர் அடுத்த செட்டிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியைச் சேர்ந்த வேலன் ஆகியோர் என்னை சந்தித்து பேசினர். அப்போது டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி அவர்கள் நடத்தி வரும் யுனிவர் காயின் நிறுவனத்தில் என்னை ₹7 லட்சத்து 70 ஆயிரத்தை டெபாசிட் செய்ய வைத்தனர். அதில் சிறிதளவு வருமானம் வந்தது. இதையடுத்து எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என 60 பேரை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வைத்தேன்.

அவர்களுக்கும் சிறிதளவு லாபம் கிடைத்தது. மேலும் யுனிவர் காயின் என்ற பெயரில் இணையதள பக்கத்தை ஏற்படுத்தி எங்கள் பணம் குறித்த விபரம் இருக்குமாறு செய்ததால் அதை நம்பி ஏராளமானோர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆனால் அவர்களுக்கு 2 வாரம் மட்டும் கொடுத்து விட்டு பின்னர் பணம் எதுவும் கொடுக்காமல் அந்த இணையதளத்தை முடக்கி மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 210 பேர் சார்பில் நான் புகார் அளித்துள்ளேன். மேலும் அவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி அவர்களிடம் நாங்கள் கேட்டபோது மோசடி செய்த 6 பேரும் தங்களுக்குள்ளாகவே ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்து நாடகமாடுகின்றனர். எனவே, இதுபற்றி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார், சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் விவேகானந்தம் தலைமையில் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 50க்கும் மேற்பட்டோர், மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அருண்குமார் நடத்தி வந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி நந்தகுமார், மத்தூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியைச் சேர்ந்த வேலன் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7, தர்மபுரி மாவட்டத்தில் ஒரு இடம் என மொத்தம் 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வீடுகளில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: