நத்தம் சேத்தூரில் செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா-பக்தர்கள் திரண்டு தரிசனம்

நத்தம் : நத்தம் அருகே சேத்தூரில் உள்ள செல்வ விநாயகர், செல்வமுத்து  மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.  இதையொட்டி கடந்த செப்.11ல் கணபதி, லெட்சுமி, நவக்கிரஹ ஹோமங்களை தொடர்ந்து  தனபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை வாஸ்து சாந்தி,  ம்ருத்சங்கிரணம், அங்குரார்ப்பனம் தொடர்ந்து சுவாமிகளுக்கு எண்வகை மருந்து  சாற்றுதல், பஞ்சலோக யந்திர பிரதிஷ்டை தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை  நடந்தது. நேற்று காலை சதுர்த்வார பூஜை, வேதிகார்ச்சனை ஸ்வர்ஷா குதி, நாடி  சந்தானம், ஸன்னவதி, மூலமந்திர மாலாமந்திர ஹோமத்தை தொடர்ந்து பூர்ணாகுதி,  தீபாராதனை, யாத்ராதானம் நடந்தது.

பின்னர் யாகசாலை பூஜையில்  வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக  எடுத்து வரப்பட்டு செல்வ விநாயகர் கோயில் கலசங்களில் புனிதநீர்  ஊற்றப்பட்டது. தொடர்ந்து செல்வ முத்துமாரியம்மன் கோயில் விமான கலசங்களில்  புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற ஏராளமான பக்தர்கள்  கோபுர தரிசனம் செய்து விநாயகர், அம்மனை வழிபட்டனர்.  பின்னர் பக்தர்களுக்கு  புனிதநீரும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து  அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நத்தம்  விசுவநாதன் எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்  சிக்கந்தர் பாட்ஷா, உலுப்பகுடி கூட்டுறவு சங்க பால் பண்ணை தலைவர்  சக்திவேல், சேத்தூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர்  முருகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் அரவங்குறிச்சி,  பட்டிக்குளம், சொறிப்பாறைப்பட்டி என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான  பக்தர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  சேத்துார் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: