இமானுவேல் சேகரன் 65வது நினைவுதினம் பரமக்குடியில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மரியாதை

பரமக்குடி: தியாகி இமானுவேல்சேகரன் 65வது நினைவுதினத்தையொட்டி  பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் 65வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இமானுவேல்சேகரன் பிறந்த ஊரான செல்லூரில் இருந்து ஊராட்சிமன்ற தலைவி மகேஸ்வரி ஜீவன் தலைமையில் வந்த கிராம மக்கள், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பால்குடம், முளைப்பாரி எடுத்தும், மொட்டை அடித்தும் மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து இமானுவேல்சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில், குடும்பத்தினர் சூவான், சந்திரசேகர் சக்கரவர்த்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து திமுக சார்பாக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மர் எம்பி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்  தலைவர் டாக்டர் செல்லத்துரை அப்துல்லா தலைமையிலும், பாஜ சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள்  எம்பி சசிகலா புஷ்பா, மதிமுக சார்பில் எம்எல்ஏக்கள் ரகுராமன், சதன் திருமலைக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம்பிரபு  அஞ்சலி செலுத்தினர்.மக்கள் விடுதலை கட்சி  நிறுவன தலைவர் முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சி சார்பாக நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: