ஆசைதீர சுவைக்க ஆயக்குடி கொய்யா

பழநி என்றவுடன் பஞ்சாமிர்தம் ஞாபகத்திற்கு வருவதுபோல், அதன் அருகே உள்ள ஆயக்குடி என்றவுடன் தித்திப்பான கொய்யாதான் ஞாபகத்திற்கு வரும். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு கொய்யா மற்றும் மா போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. ஆயக்குடியில் விளைவிக்கப்படும் கொய்யா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை, தனிச்சுவை மிக்கவை.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆயக்குடியில் நாள்தோறும் கொய்யா சந்தை நடைபெறும். இங்கு பிரெஷ்ஷான ெகாய்யா பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அங்கு வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஏல முறையில் கொய்யா வகைகளை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதுபோக பழநி செல்லும் வழியில் ஆங்காங்கே சாலையோரம் விவசாயிகள் விற்று வருகின்றனர். பழநி வழியாக செல்லும் பயணிகள் கமகமக்கும் இந்த கொய்யாவை வாங்காமல் செல்வதில்லை. இத்தகைய பிரசித்தி பெற்ற கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி கொய்யா விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆயக்குடி கொய்யாவிற்கு தனி ருசியும், சிறப்பும் உள்ளது. விற்பனைச் சந்தையில் ஆயக்குடி கொய்யாவிற்கு தனி விலையும், வாடிக்கையாளர்களும் உண்டு. பல ஆண்டுகளாக ஆயக்குடி விவசாயிகளால் கொய்யா விளைவிக்கப்பட்டாலும், சரியான விலை கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு, பழநி பஞ்சாமிர்தம் போன்றவைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆயக்குடி கொய்யாவிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும், ஆயக்குடியில் பழச்சாறு தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதனால் விவசாயிகள் வாழ்க்கை மேம்படும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: