நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஸ்மோக் பிஸ்கட் பயங்கரம்: எமனாகும் திரவ நைட்ரஜன்! மருத்துவர்கள் எச்சரிக்கை

* சிறப்பு செய்தி
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே உணவு பொருட்கள் சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரச்னைகள் அதுவாக வருகிறதா இல்லை, பொதுமக்கள் தானாக தூக்கி சுமக்கிறார்களா என்று பார்த்தால் ஒவ்வொரு பிரச்னைகளையும் அவர்களாகவே தேடிச்சென்று மாட்டிக் கொள்வதும், அதன் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அதிலும், கடந்த 10 ஆண்டுகளில் உணவு பழக்க வழக்கத்தில் பல்வேறு விஷயத்தில் பொதுமக்கள் தங்களது உடலை வருத்தி வருகின்றனர் என்பதற்கு பெருகிவரும் மருத்துவமனைகளே சான்று.

அந்த வகையில், அதிக மசாலா கலந்த உணவு வகைகள், அதிக காரம் கலந்த உணவு வகைகள், அதிக கலர் கலந்த வண்ணமயமான உணவு வகைகள் என பல்வேறு உணவுகளை எடுத்துக்கொண்ட நம்மவர்கள் அதிலிருந்து பல்வேறு பாடங்களையும் கற்று வருகின்றனர். இவ்வளவு பெரிய உலகில் இயற்கை படைப்பில் பழம், காய்கறிகள் உள்ளிட்ட எவ்வளவு பொருட்கள் சாப்பிட இருந்தும் உடலுக்கு சற்றும் ஒத்துக்கொள்ளாத சில உணவுகளை பொதுமக்கள் தேடி சென்று சாப்பிடுவதும், அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதும் தொடர்கிறது.

சமீபத்தில் நைட்ரஜன் கலந்த திரவ உணவு வகைகளை சாப்பிட்ட சிறுவன் எப்படி எல்லாம் துடி துடிக்கிறான் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உடனடியாக கொதித்து எழுந்த நெட்டிசன்கள் நைட்ரஜன் கலந்த திரவ உணவு வகைகளை பற்றி அலசி ஆராய்ந்து திட்டி தீர்த்து விட்டனர். ஏதோ ஒரு வகையில், திட்டியவர்களும் அதனை உட்கொண்டு இருப்பார்கள் என்றே கூறலாம். பிரச்னை வராத வரை எதைப்பற்றியும் யோசிக்காத மனிதர்கள் பிரச்னை வந்த பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து கும்மியடிப்பதை காலங்காலமாக பார்க்கிறோம்.

சமூக வலைதளங்களில் 2 தினங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட்டை உட்கொண்டு அந்த புகையை தாங்க முடியாமல் துடிதுடித்து தனது தாய் மடியில் விழுந்து கதறும் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு, பலரும் அதை ஷேர் செய்தனர். அந்த சிறுவன் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த வீடியோ ஐதராபாத்தில் உள்ள ஒரு பொருட்காட்சியில் நடந்த சம்பவம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்பாக ஸ்மோக் பிஸ்கட் எனப்படும் உணவுப் பொருட்களை வாயில் போட்டவுடன் ஜில்லென்று உணர்ச்சி ஏற்படும். பிறகு வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளிவரும் புகையை பார்த்து அதனை சாப்பிட்டவர்கள் ரசிப்பார்கள். அந்த ஆனந்தத்தை அனுபவிப்பார்கள். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் சமீப காலமாக அதிக அளவில் இதை பயன்படுத்தி வருகின்றனர். பிஸ்கட்டுடன் திரவ நைட்ரஜனை சேர்த்து அதனை வாயில் போடும்போது புகை வருகிறது. மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள திரவ நைட்ரஜன் ஸ்மோக்கிங் பிஸ்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.

ஐதராபாத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்த நேரத்தில் அச்சிறுவன் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது. அதனுடன் நைட்ரஜன் திரவத்தையும் சேர்த்து உண்டதால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எதையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது. எனவே பிஸ்கட்டுடன் நைட்ரஜன் திரவம் உடலினுள் செல்லும்போது உணவு குழாய் அடைப்பு ஏற்படுவதுடன் தோல் திசுக்களும் உறையும் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வட மாநிலங்களில் அதிகம் வரவேற்பை பெற்ற ஸ்மோக் பிஸ்கட் உணவு பொருட்களை இப்போது நம்ம ஊர்களிலும் திருவிழாக்கள், நட்சத்திர ஓட்டல்கள், கண்காட்சிகள், பொருட்காட்சிகள் என பல இடங்களிலும் பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். புதுமையான ஒரு விஷயம் வந்தவுடன் அது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பற்றி சிந்திக்காமல் அதனை அனுபவித்து பார்க்கும் மக்களும் ஸ்மோக்கிங் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு அதிக வரவேற்பு அளிக்கின்றனர். வருமுன் காப்பதே நல்லது என்ற ரீதியில் ஸ்மோக்கிங் பிஸ்கட் விசயத்தில் தற்போது ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்த்தால் அது அவர்களது குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

* நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும்
திரவ வடிவிலான நைட்ரஜன் கலந்த உணவு குறித்து பெரம்பூரை சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது: நைட்ரஜனை ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துவார்கள். வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள், பிஸ்கட் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது. நைட்ரஜனுடன் ஆக்சிஜன் சேர்ந்தால் நைட் ரீக் ஆக்சிஜனாக மாறிவிடும். மருத்துவத்தில் மயக்கம் வருவதற்காக இதை பயன்படுத்துவோம். இதே நைட்ரஜன் ஹைட்ரஜன் சேர்ந்து விட்டால் அமோனியா உற்பத்தி ஆகிவிடும். இது மிகவும் அபாயகரமானது.

இது நமது உடலில் சென்றால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூச்சு திணறல் ஏற்படும். லிவர் பாதிக்கப்படும். உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். சமீப காலமாக சென்னையில் பல்வேறு இடங்களில் ஐஸ்கிரீம் மீது நைட்ரஜன் திரவ வாயுவை ஊற்றி தருகிறார்கள். அதிலிருந்து ஒரு விதமான புகை வருவதால் மிகவும் பிரஸ்ஸாக உள்ளது என நினைத்து நிறைய பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான செயல். இதேபோன்று பிஸ்கட் மீதும் நைட்ரஜனை ஊற்றி தருகிறார்கள். இதுவும் மிகவும் ஆபத்தான செயல். நைட்ரஜனை திரவ நிலையில் நாம் எடுத்துக் கொள்ளும்போது உடல் பாதிப்புகள் கண்டிப்பாக ஏற்படும். நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழப்பு வரை கொண்டு சென்று விடும். எனவே இவற்றையெல்லாம் மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழக அரசு எச்சரிக்கை
திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011ன்படி பேக்கிங் எரிவாயு மற்றும் உறைபணி ஆக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் கூறியதாவது: ஐதராபாத்தில் நடந்து, சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோ காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஸ்மோக்கிங் பிஸ்கட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இதை பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது. திரவ நைட்ரஜனை பிஸ்கட்டை வாங்கி பொழுதுபோக்கிற்காக சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் போது எக்காரணத்தை கொண்டும் திரவ நைட்ரஜன்கள் கலந்த உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஸ்மோக்கிங் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து அதன் பாதிப்பு குறித்து சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திரவ நைட்ரஜனை தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும். மீறி உணவு பொருட்களில் கலந்து பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக நைட்ரஜனை தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்துவார்கள். மெட்டல்களை கையாளும் தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்கள், உணவு பொருட்களை கையாள்வதில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக, உணவுகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்ற உணவுப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க திரவ நைட்ரஜனை பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, ஐஸ் கிரீம், பால் போன்ற உணவுகளை எடுத்துச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட குளிர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதற்காக, பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மட்டும் தான் உணவு பாதுகாப்புத் துறையில் நைட்ரஜனை அனுமதிக்கின்றனர். ஆனால் அதை பிஸ்கட்டில் கலந்து வாயில் போட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது.
அது ஒரு உணவே கிடையாது. மைனஸ் 196 டிகிரி உள்ள இந்த நைட்ரஜனை நாம் சாதாரண ஒரு அறைக்கு கொண்டு வந்தால் கரைந்து செல்வதை பார்க்க முடியும். அந்த மைனஸ் 196 டிகிரியில் நாம் ஹைட்ரஜனை எடுக்கும்போது உடம்பில் எந்த இடத்தில் பட்டாலும் அது உடம்பை பொசுக்கி விடும். இது நமது உடலில் சென்று விட்டால் ஆக்சிஜன் நமது உடலில் செல்லாது. இதனால் மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டு உடனடியாக இறப்பு ஏற்பட்டுவிடும். எனவே பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஸ்மோக் பிஸ்கட் பயங்கரம்: எமனாகும் திரவ நைட்ரஜன்! மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: