வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல்; தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் கைது: எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வீட்டில் அத்துமீறி நுழைந்து  தாய், மகளை தாக்கியதாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்  பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார். தூத்துக்குடி  மாவட்டம் ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி ராஜா (27). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள முக்காணியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மனைவி ஷோபனா (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் ஷோபனா, மாகாளி ராஜாவிடம் வாங்கிய பணத்தை நேற்று (செப்.5) திருப்பி  தருவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால்  அவரால் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த  காவலர் மாகாளிராஜா, ஷோபனா வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்த டி.வி., பிரிட்ஜ் ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன் ஷோபனா, அவரது மகள் ஆகியோரை தாக்கியும் அவதூறாக பேசியும் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து  ஷோபனா, ஆத்தூர் போலீசில்  புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன்,  குற்ற செயலில் ஈடுபட்டவர் ஆயுதப்படை காவலராக இருந்தபோதிலும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் காவலரை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்குமாறு திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பனுக்கு  உத்தரவிட்டார். அதன்பேரில் ஆத்தூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் மாகாளிராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ``குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எஸ்.பி. பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

Related Stories: