சின்னாளபட்டி அருகே துளசி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே வெள்ளோடு பகுதியில் பூ செடிகளை போல் துளசி செடிகளை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான செம்பட்டி, சித்தையன்கோட்டை, நடுப்பட்டி, காமலாபுரம், காந்திகிராமம், செட்டியபட்டி, வெள்ளோடு, நரசிங்கபுரம், கரட்டழகன்பட்டி, வேளாங்கண்ணிபுரம் உட்பட பல கிராமங்களில் பூ விவசாயிகள் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தில் அதிக அளவில் பலவித பூக்களை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் மல்லிகை, முல்லை, செவ்வந்தி, சம்மங்கி, செண்டுபூ, காக்கரட்டான், ரோஸ், பட்டுரோஸ், சாமந்திப்பூ, கலர்ஜாதிப்பூ, வாடாமல்லி உட்பட பலவித பூக்களை பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் துளசி செடியை அதிக அளவில் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். வருடம் முழுவதும் துளசி செடிகளுக்கு கிராக்கி என்பதாலும், கதம்பம் மற்றும் பூமாலைகள் கட்டுவதற்கு துளசி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாலும் அவற்றை பயிரிட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.இது குறித்து வெள்ளோடு விவசாயிகள் கூறுகையில், ‘‘பூக்களை பயிரிடும்போது ஒரு நாள் கொள்முதல் விலை அதிகமாக இருக்கும்.

மறுநாள் அதளபாதாளத்திற்கு சென்றுவிடும். ஆனால் துளசி அப்படி இல்லை. தொடர்ந்த ஒரே விலையாக இருப்பதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும், தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம் என்பதாலும் நாங்கள் துளசியை அதிகம் பயிரிட்டு வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: