ஹின்னம்னோர் புயல் ஆக்ரோஷம் சீனா, ஜப்பான், தைவானில் படகு, விமான சேவை ரத்து

பீஜிங்: இந்தாண்டின் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் தீவிரமடைந்து வருவதால், சீனா, தைவான், ஜப்பானில் படகு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘ஹின்னம்னோர்’எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது, 270 கிமீ அதிக வேகமாக காற்று வீசும் என்பதால், இந்தாண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படுகிறது. இந்த புயலானது சீனா, தைவான் மற்றும் ஜப்பானை பெரியளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சீன தேசிய வானிலை மையம் மஞ்சள் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெஜியாங், ஷாங்காய் மற்றும் தைவானில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் உள்ளிட்ட கிழக்கு நகரங்களில் படகு சேவையை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல்கள் துறைமுகம் திரும்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 50 ஆயிரம் போலீசார் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினின் ஒகினாவா தீவை ஹின்னம்மோர் புயல் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தைவானில் மியாயோலி மாகாணத்தில் 100 சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து, படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Related Stories: