அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்கா அலாஸ்காவில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்றுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, ‘அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை 10 நாள்கள் நடந்த ‘செங்கொடி’ கூட்டு வான் பயிற்சியில் இந்திய விமானப் படையின் குழு பங்கேற்றது. சிங்கப்பூா், பிரிட்டன், நெதா்லாந்து, ஜொ்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப் படையினரும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றனா்.

இப்பயிற்சியில் இந்திய விமானப் படையின் ரஃபேல் விமானம் பங்கேற்றது இதுவே முதல் முறை. ரஃபேல் விமானம் சிங்கப்பூரின் எஃப்-16 மற்றும் அமெரிக்காவின் எஃப்-15 போன்ற அதிநவீன போா்விமானங்களுடன் இயக்கப்பட்டது. இதற்காக இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பயணம் செய்த இந்திய விமானப் படையின் ரஃபேல் போா் விமானத்துக்கு ‘ஐஐ-78’ விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அதேசமயம், குளோப்மாஸ்டா் சி-17 விமானம் மூலம் பணியாளா்கள் மற்றும் உபகரணங்களின் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிற்சியின் மூலம் சா்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இயங்கும்தன்மை பற்றிய நுண்ணறிவு மற்றும் பன்னாட்டுச் சூழலில் பணிகள் பற்றிய கூட்டுப் புரிதல் ஆகிய அனுபவங்கள் இந்திய விமானப் படைக்கு கிடைத்தன. பயிற்சியின் போது மோசமான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்யத்துக்கு குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய இந்திய விமானப் படையின் பராமரிப்பு குழுவினா் விடாமுயற்சியுடன் பணியாற்றினா். அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தியா விமானப் படை, கிரேக்கம் மற்றும் எகிப்து நாட்டு விமானப் படைகளுடன் பயிற்சியில் பங்கேற்ற பிறகு ஜூன் 24-ஆம் தேதி தாயகம் திரும்பும்’ என குறிப்பிட்டுள்ளது .

The post அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: