ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்

லாகூர்: பாகிஸ்தானில் ₹5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு நடந்த திருமணம் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா அடுத்த சார்சத்தா நகரில் ஆலம் சையத் என்பவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகளை, 72 வயதுடைய ஹபீப் கான் என்ற முதியவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

இதையறிந்த போலீசார் குழந்தை திருமண முயற்சியை தடுத்து, 72 வயது முதியவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுமியின் தந்தை ஆலம் சையத், தனது மகளை 5,00,000 ரூபாய்க்கு ஹபீப் கான் என்ற முதியவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். அதையடுத்து சிறுமிக்கும் முதியவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

இந்த தகவல் குழந்தைகள் நல மையம் மூலம் போலீசுக்கு கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று முதியவரையும், திருமணத்தை நடத்தி வைப்பவரையும் கைது செய்தோம். ஆனால், சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இவர்கள் மீது குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் ராஜன்பூரில் உள்ள 11 வயது சிறுமியை, 40 வயது நபர் திருமணம் செய்து கொள்ளும் முயற்சி நடந்தது. அதனை தடுத்து நிறுத்தினோம்’ என்றார்.

The post ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: