ஜப்பான் ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய்

ஒசாகா: ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெறும் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றுடன் வெளியேற, ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டும் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர். அதில் நேற்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பிரணாய்(30வயது, 18வது ரேங்க்), சிங்கப்பூர் வீரர் லோ கீன் யேவ்(25வயது, 7வது ரேங்க்) உடன் மோதினார். சுமார் 44 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பிரணாய் 22-20, 21-19 என நேர் செட்களில் போராடி வென்றார். அதன் மூலம் முதல் வீரராக காலிறுதியை உறுதி செய்தார். மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்(29வயது, 14வது ரேங்க்), ஜப்பான் வீரர் கன்டா சுனேயமா(26வயது, 17வது ரேஙக்) உடன் களம் கண்டார். அதில் கன்டா வேகத்தில் 40 நிமிடங்கள் அதிக எதிர்ப்புகள் இல்லாமல் 21-10, 21-16 என நேர் செட்களில் ஸ்ரீகாந்த் தோற்று வெளியேறினார். பிரணாய் இன்று நடைபெறும் காலிறுதியில் சீன தைபே வீரர் சோவ் டின் சென்(32வயது, 6வது ரேங்க்) உடன் மோதுகிறார்.

Related Stories: