அஸ்தினாபுரம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட அஸ்தினாபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பல்லாவரம் ரேடியல் சாலைக்கு செல்ல கன்னிக்கோயில் தெரு முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. தினசரி ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பல மாதங்களாக இந்த சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. சமீப காலமாக பெய்து வரும் மழையால், சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாதபடி மழைநீர் தேங்கியுள்ளது. இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி, கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

அதையும் மீறி பயணிக்கும் இரு சக்கர வாகனங்களின் இன்ஜின் பகுதியில் தண்ணீர் உள்ளே சென்று வாகனங்கள் பழுதடைகின்றன. மேலும், அவசரகால ஊர்திகளான தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட குறித்தநேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கன்னிக்கோயில் தெருவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: