ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பும்ரா, ஹர்சல் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி; வாக்கர் யூனிசுக்கு இர்பான் பதான் பதிலடி

மும்பை: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் வரும் 27ம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் லீக் சுற்றில் பி பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்வரும் 28ம்தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளன. உலக கோப்பை டி.20 போட்டிக்கு பின் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ், அப்ரிடி விலகல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஹர்சல் பட்டேல் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும் என டுவிட் செய்துள்ளார். இர்பான் பதானின் ட்வீட்டுக்கு, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபரும் பதிலளித்தார். பாலிவுட் திரைப்படமான `ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்’ படத்தின் ‘பெஹ்லா நாஷா’ பாடலின் வரிகளுடன் ஒரு காட்சியை வெளியிட்டுள்ளார்.

Related Stories: