காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி விலகல்

இஸ்லாமாபாத்: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி விலகியுள்ளார். இலங்கையில் இந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை டி20, அங்கு நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக யுஏஇ மைதானங்களுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஆசிய கோப்பை டி20 தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் ஆக.27 முதல் செப். 11ம் தேதி வரை நடக்க உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன.

அதைத் தொடர்ந்து சூப்பர்-4 சுற்றும், அதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் துபாயில் செப்.11ம் தேதி நடக்கும் பைனலில் மோதும். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா ஆக. 28ம் தேதி பாகிஸ்தானையும், ஆக.31ல் தகுதிநிலை அணியையும் எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஷாஹீன் அஃப்ரிடி, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்.

தற்போது பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், அங்கு பாகிஸ்தான் அணியுடன் இருந்து ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் 5-6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார்.

Related Stories: