தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்


நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற தென் ஆப்ரிக்கா 10 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலக கோப்பை போட்டிகளின் லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடும் தென் ஆப்ரிக்க அணி, நாக் அவுட் சுற்றுகளில் மழை, டிஎல்எஸ் விதி காரணமாக வாய்ப்பை இழப்பது ஒரு சோக சரித்திரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணி இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வென்றதில்லை. இந்நிலையில், நடப்பு தொடரின் லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்கா, அந்த சுற்றிலும் இங்கிலாந்து, அமெரிக்க அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. சி பிரிவில் 4 வெற்றியுடன் முதலிடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ், சூப்பர்-8ல் இங்கிலாந்திடம் மண்னைக் கவ்விய நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது.

ஆனாலும், கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று கடும் நெருக்கடியுடனேயே களமிறங்கின. கொஞ்சம் அசந்தாலும் அரையிறுதி வாய்ப்பு அம்பேல் என்ற முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீசியது. ஹோப் 0, பூரன் 1 ரன்னில் வெளியேற, அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் கைல் மேயர்ஸ் – ரோஸ்டன் சேஸ் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். மேயர்ஸ் 35 (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சேஸ் 52 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, சக வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். 2 சிக்சர்களை பறக்க விட்ட ரஸ்ஸல் ரன் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. அல்ஜாரி 11, குடகேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷம்சி 3, யான்சென், மார்க்ரம், மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, ரஸ்ஸல் வீசிய 2வது ஓவரில் ஹெண்ட்ரிக்ஸ் (0), டி காக் (12) விக்கெட்டை பறிகொடுக்க தடுமாறியது. அந்த ஓவர் முடிவில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, தென் ஆப்ரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் டிஎல்எஸ் விதிப்படி தென் ஆப்ரிக்கா 17 ஓவரில் 123 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. வழக்கம்போல தென் ஆப்ரிக்காவை துரதிர்ஷ்டம் துரத்தினாலும், இம்முறை சுதாரித்துக்கொண்ட அந்த அணி 16.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து வென்றது.  அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 29, கிளாஸன் 22, யான்சென் 21* ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ரஸ்ஸல், அல்ஜாரி த லா 2 விக்கெட் கைப்பற்றினர். ஷம்சி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா தொடர்ச்சியாக 7வது வெற்றியுடன் கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேற, போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா சூப்பர்-8 சுற்றுடன் மூட்டைகட்டின. தென் ஆப்ரிக்கா 2014க்கு பிறகு முதல் முறையாக டி20 உலக கோப்பை அரையிறுதியில் நழைந்துள்ளது.

The post தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: