இங்கிலாந்துக்கு எதிராகவும் இதே ஆட்டம் தான்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கோஹ்லி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவை கலங்கடித்தார். அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். ரிஷப் பன்ட் 15, சூர்யகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 28, ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் மிட்செல் மார்ஷ் – ட்ராவிஸ் ஹெட் இணைந்து அதிரடியில் இறங்கி இந்திய அணியை பதற வைத்தனர். மார்ஷ் 37 ரன், கிளென் மேக்ஸ்வெல் 20 ரன், ஸ்டாய்னிஸ் 2 ரன்னிலும் வீழ்ந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் 43 பந்துகளில் 76 ரன் குவித்த ட்ராவிஸ் ஹெட், பும்ரா வீசிய 17வது ஓவரில் அவுட்டானார். டிம் டேவிட் 15, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர். 41 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசிய ரோகித்சர்மா ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மனம் திருப்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா என்ன மாதிரியான அச்சுறுத்தலை கொடுக்கும் என்று நன்றாக அறிவோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் நல்ல இலக்கு. ஏனென்றால் காற்று பலமாக வீசும் என்பதால், வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கும். பிட்ச் மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.

அதேபோல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட வேண்டிய தருணமாகவும் அமைந்தது. சரியான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய தேவை இருந்தது. குல்தீப் யாதவின் பலம் என்ன என்பது தெரியும். அதனால் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். நியூயார்க் பிட்ச்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் அப்படியல்ல. அரையிறுதி சுற்றை பொறுத்தவரை இதுவரை எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படிதான் விளையாடுவோம். ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூடுதலாக புரிந்து கொள்வோம். இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடப் போவது நன்றாக இருக்கும்’’ என்றார்.

சாதனை மேல் சாதனை

இந்த போட்டியில் ரோகித்சர்மா 92 ரன்கள் எடுத்ததன் மூலம் (4165ரன்) சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் (4145ரன்) மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (4103ரன்) ஆகிய இருவரையும் முந்தி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இந்த உலக சாதனையை செய்த ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் வரிசையிலும் முதல் இடத்தை பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

பாபர் அசாம் 85 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், ரோகித் சர்மா 60 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார். இதுபோல் சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸ் என்ற மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரோகித்சர்மா படைத்தார். மேலும் இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 29 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார்.

The post இங்கிலாந்துக்கு எதிராகவும் இதே ஆட்டம் தான்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: