பாலின ஏற்றத்தாழ்வு குறைகிறது 2047-ம் ஆண்டுக்குள் கனவுகள் நனவாகும்: ஜனாதிபதி முர்மு உரை

புதுடெல்லி: ‘பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன. நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது,’ என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

நாட்டின் 76வது சுதந்திர தின விழாவையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு நேற்று மாலை தனது முதல் உரையை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் சாதனைகள் பல வளர்ந்த நாடுகளை விட சிறந்ததாக இருந்தது. கொரோனாவுக்குப் பிறகு ஒரு புதிய இந்தியா எழுச்சி பெறுவதை உலகம் கண்டுள்ளது. கொரோனாவால் பொருளாதார நெருக்கடிகளுடன் உலகம் போராடிக் கொண்டிருக்கையில், இந்தியா தனது செயல்பாட்டை ஒன்றிணைத்து, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது.  

நாட்டில் பாலின ஏற்றத் தாழ்வுகள் குறைந்து வருகின்றன, பெண்கள் பல தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருவதுடன், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன. 2047ம் ஆண்டுக்குள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அம்பேத்கரின் கனவுகளை நாம் முழுமையாக நனவாக்கி இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

முற்போக்கான, வளமானநாட்டை கட்டமைப்போம்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், ‘இந்த சுதந்திர தினத்தன்று, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்’ என கூறி உள்ளார்.

Related Stories: