‘மலைகளின் இளவரசிக்கு’ மாற்று பாதையான மூணாறு சாலை பணியை மும்முரமாக்க வேண்டும்-வணிகம் மட்டுமல்ல... சுற்றுலா வளர்ச்சியும் சூப்பராகும்

கொடைக்கானல் : கொடைக்கானலுக்கு மாற்று பாதையான மூணாறு சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் வணிக ரீதியிலாக மட்டுமின்றி சுற்றுலா வளர்ச்சியும் மேம்படையும்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், கொடைக்கானலின் ஜில் குளிரையும் அனுபவித்தும் செல்கின்றனர்

முக்கிய சுற்றுலா தலங்களான தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்கள் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பயணிக்க முக்கிய சாலையாக வத்தலக்குண்டு பிரதான சாலை, பழநி பிரதான சாலை, அடுக்கம் சாலை ஆகியவை உள்ளது.

கடந்த 1925ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைக்கப்பட்டது. இதுவே ‘எஸ்கேப் ரோடு’ என அழைக்கப்பட்டது. இந்த சாலை மூணாறு முதல் கொச்சி வரை செல்லும் சாலை உடன் இணைகிறது. இந்த சாலை 1990ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. தமிழ்நாடு வனத்துறைக்கும், கேரளா நெடுஞ்சாலை துறைக்கும் ஏற்பட்ட உரிமை பிரச்னைகளால் இந்த சாலையின் பராமரிப்பு கைவிடப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பட்சத்தில் வணிக ரீதியிலும் கொடைக்கானல் நல்ல முன்னேற்றம் அடைவதுடன், சுற்றுலா வளர்ச்சியும் மேம்பாடு அடையும். மேலும் கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விரைவாக ஏற்றுமதி செய்ய முடியும். இந்த சாலை திறக்கப்படும்பட்சத்தில் பயண நேரம் குறையும். இதன்மூலம் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொடைக்கானல்- மூணாறு சாலை அமைக்கப்படுவதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல 2 மாநிலங்கள் இந்த சாலை அமைப்பதன் மூலம் இணைக்கப்படும். எனவே தமிழக அரசு கொடைக்கானல்- மூணாறு சாலை பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களை இணைத்து மூணாறுக்கு சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்மூலம் மேல்மலை கிராமங்கள் வளர்ச்சி பெறும்’ என்றனர்.

Related Stories: