நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்: உடனடியாக சீரமைப்பதில் சிக்கல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகர்கோவிலில் தற்போது புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதமே பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடிவடையாமல் உள்ளன. பிரதான குழாய்கள் பதிப்பு மற்றும் வீட்டு குழாய்களுக்கு இணைப்பு கொடுத்தல் பணிகள் நடக்கின்றன.

ஜேசிபி மற்றும் துளையிடும் இயந்திரங்கள் மூலம் சாலையை தோண்டி குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே இருந்த பழைய குடிநீர் குழாய்கள் உடைந்து தற்போது தண்ணீர் ஆறாக ஓடுகிறது. வடசேரி பாலமோர் ரோடு, சிபிஎச் ரோடு, ஆறாட்டு ரோடு பகுதியில் மட்டும் சுமார் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறி உள்ளது. தற்போது குடிநீர் வினியோகமும் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வீணாக செல்கிறது.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் இந்த உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர்  வீடுகளுக்கு வினியோகம் நடந்து வருகிறது. எனவே சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பிரதான குழாய்கள் மூலம் சிறு, சிறு குழாய்களுக்கு வரும் தண்ணீரை அடைத்தால் உடைப்புகளை சரி செய்ய முடியும். குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என்பதால், 2, 3 நாட்களுக்கு பின்னரே இந்த பணிகள் நடக்கும் என்றனர்.

Related Stories: