நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது-சாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டும் ஆணையம்

நாங்குநேரி : தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து முந்திரிக்கொட்டை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு குமரி மாவட்டம் குலசேகரத்திலுள்ள தனியார் முந்திரி கொட்டை உடைக்கும் தொழிற்சாலைக்கு ஒரு லாரி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. லாரியை குலசேகரத்தை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (37) என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நாங்குநேரி அடுத்துள்ள வாகைக்குளம் தேசிய நெடுஞ்சாலை உள்ள அணுகு சாலையில் ஓய்வெடுப்பதற்காக டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.

அப்போது லாரி நிறுத்தப்பட்ட இடத்தில் சுமார் மூன்றடியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது. இதில், டிரைவர் ராஜேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதன்பிறகு குலசேகரத்தில் இருந்து வந்த வேறு லாரிகள் முந்திரி கொட்டை மூட்டைகளை மாற்றி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு வழித்தட சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த சாலைகளை ஒப்பந்த நிறுவனங்கள் முறையாக பராமரிப்பதில்லை. இது தொடர்பாக பல புகார்கள் வந்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்தபாடில்லை. தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வரை 2 சுங்கச்சாவடிகளை கடந்து தினமும் லாரிகள் செல்கின்றன.

இந்த சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலித்தாலும் சாலைகள் பராமரிப்பு முழுமையாக இல்லை. உள்ளூர் பயன்பாட்டிற்காகவும், நீண்ட தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தவும் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சில இடங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு அணுகு சாலைகள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இப்பகுதியில் பெரும் விபத்து நடப்பதற்குள் இனிமேலாவது தூத்துக்குடி - நாகர்கோவில் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அணுகு சாலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: