ஓபிஎஸ் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிப்பது ஆளில்லாத கடையில டீ ஆத்துற வேல: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: ஓபிஎஸ் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிப்பது என்பது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் கதை தான் இது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் கதைதான். ஒட்டுமொத்தமாக எடப்பாடி தலைமையில் கட்சி இன்றைக்கு செயலாற்றி வருகிறது. அவர்கள்  தரப்பில் ஒருசிலரை நியமித்து விட்டு நான்தான் கட்சி என்றால் அது எள்ளி நகையாடக்கூடிய விஷயமாகத்தான் பார்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

* ‘அவுகளுக்கு எவ்வளவு வேல இருக்கும்’

ஜெயக்குமாரிடம் நிருபர்கள், ‘‘எடப்பாடி டெல்லி சென்று பாதியிலே திரும்பி விட்டாரே. பிரதமர், உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெயக்குமார், ‘‘இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா.. நீங்களாக எதையாவது எழுதுகிறீர்கள். குடியரசு  தலைவராக திரவுபதி முர்மு நிகழ்ச்சியில் தம்பிதுரை கலந்து கொண்டார். இருக்கின்ற சூழ்நிலையைப் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் குடியரசு தலைவருக்கான தேர்தல். மற்றொன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல். அடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். இந்த மூன்றும் நடக்கும் சூழ்நிலையில்  அவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும். வேறு ஒரு நாளில் இந்த சந்திப்பு இருக்கும். நாங்கள் சந்திக்கிறோம் என்று கேட்டு அவர்கள் வாய்ப்பு தரவில்லை என்று தெரிவிக்கவில்லை. இது வேண்டுமென்றே பரப்பக்கூடிய செய்தியாகத்தான் கருத முடியும்’’ என்றார்.

Related Stories: