மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஹங்கேரி செஸ் வீரர், வீராங்கனை சென்னை வருகை

மீனம்பாக்கம்: மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஹங்கேரி நாட்டில் இருந்து வீரர், வீராங்கனை விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. 188 நாடுகளை சேர்ந்த சுமார் 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக தனியார் விடுதி, ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணி சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த துபாய் விமானத்தில், ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஒரு வீரர் மற்றும் வீராங்கனை வந்தனர். இருவரையும் அரசு அதிகாரிகள், ஒலிம்பிக் விழா குழுவினர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த செஸ் குதிரை வீரன் சிலை முன்பு நின்று, தங்களது செல்போனில் படமெடுத்து கொண்டனர்.

பின்னர் இரு வீரர்களையும் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைப்பதற்கு காரில் விழா அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, இன்றிரவு 10.40 மணிக்கு வரும் மலேசிய, பிரான்ஸ் விமானங்களில் மேலும் 20 வீரர்கள் சென்னைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்று அழைத்து செல்ல தமிழக அரசின் சிறப்பு குழு மற்றும் செஸ் ஒலிம்பிக் வரவேற்பு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.

Related Stories: