யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி

லிப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தியது. எப் பிரிவில் நேற்று நடந்த இப்போட்டியில், போர்ச்சுகலின் நட்சத்திர வீரரும் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கியதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப அவரும், அவரது அணியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி செக் அணியை திணறடித்தனர். எனினும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. 2வது பாதியிலும் அதே நிலை தொடர்ந்தது. 62வது நிமிடத்தில் லூகாஸ் புரோவோட் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து போர்ச்சுகல் வீரர்கள், கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது. அதனால் செக் 1-0 என முன்னிலை பெற்றது.

அதனை ஈடு செய்யும் போர்ச்சுகல் முயற்சிக்கு செக். வீரர்களே உதவினர். 68வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நுனோ மெண்டெஸ் அடித்த பந்தை செக். கோல் கீப்பர் விட்ஸ்லாவ் ஜாரோஸ் தடுத்தார். பந்தை கோல் பகுதியில் இருந்து வெளியேற்ற முயன்ற செக் வீரர் ராபின் ஹார்னக் காலில் பட்ட பந்து சுய கோலாக அமைய 1-1 என சமநிலை ஏற்பட்டது. 87வது நிமிடத்தில் முன்கள வீரர் பேட்ரிக் தட்டித் தந்த பந்தை ரொனால்டோ தலையால் முட்டி கோலாக்க முயன்றார். ஆனால் அது கம்பத்தில் பட்டு திரும்பியது. அதை தடுத்த சக வீரர் தாமஸ் சவுசெக் அருமையாக கோலாக்கினார். அதை போர்ச்சுகல் தரப்பு கொண்டாடினாலும், மறு ஆய்வுக்கு பிறகு நடுவர் கோல் இல்லை என அறிவித்தார். கூடுதல் நேரத்தில் (90+2) போர்ச்சுகல் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிஸ்சா அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 2-1 என முதல் வெற்றியை பதிவு செய்தது. போர்ச்சுகல் வீரர் விடின்ஹா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

The post யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: