சூப்பர்-8 சுற்றில் இன்று: இந்தியா – ஆப்கான் மோதல்

கென்சிங்டன்: ஐசிசி உலக கோப்பையின் சூப்பர்-8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றின் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், சி பிரிவில் 2வது இடம் பிடித்த ஆப்கானும் சூப்பர்-8 சுற்றில் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் இரு அணிகளும் மோதும் போட்டி வெஸ்ட் இண்டீசின் கென்சிங்டன் நகரில் இரவு 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ரோகித் தலைமையிலா இந்திய அணி, லீக் சுற்றில் ஒரு ஆட்டத்திலும் தோற்காமல் சூப்பர்-8 சுற்றுக்கு மிகுந்த உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் முன்னேறி உள்ளது. பும்ரா, அர்ஷ்தீப், ஹர்திக், அக்சர் ஆகியோரின் பந்துவீச்சு பங்களிப்பு இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதே சமயம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கோஹ்லி நடப்பு தொடரில் 1, 4, 0 என தடுமாறி உள்ளார். ரிஷப், அக்சர், சூரியகுமார், ஷிவம் துபே கணிசமாக எடுத்த ரன்களே அணியின் வெற்றிக்கு கை கொடுத்தன.

பந்துவீச்சுக்கு சாதகமான அமெரிக்க ஆடுகளங்களில் திணறிய அதிரடி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே சமயம், ரஷீத் கான் தலைமையிலான ஆப்கான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. பந்துவீச்சில் ஃபசுல்லா ஃபரூக்கி, முகமது நபி, நூர் அகமது, ரஷீத் கான், நவீன் உல் ஹக் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். பேட்டிங்கிலும் குல்பாதீன் நயீப், இப்ராகிம் ஸத்ரன், ரஹ்மானுல்லா குர்பாஸ் , அசமத்துல்லா ஒமர்சாய் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டி20ல் இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை என்ற வரலாறு ஆப்கான் அணியின் மன உறுதியை குலைக்குமா? அல்லது உத்வேகத்தை கொடுக்குமா? என்ற கேள்விகள் தொக்கி நிற்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

* இரு அணிகளும் 8 முறை டி20ல் மோதியுள்ளதில் இந்தியா 7-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது).
* கடைசியாக பெங்களூருவில் விளையாடிய ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன், ஆப்கான் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவிக்க ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் இந்தியா 5 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுக்க, ஆப்கான் 3 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
* உலக கோப்பையில் 2010 (வெஸ்ட் இண்டீஸ்), 2012 (இலங்கை), 2021ல் (அபுதாபி) மோதியதில்… முறையே 7 விக்கெட், 23 ரன், 66 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
* இந்தியா கடைசியாக விளையாடிய 5 டி20ல் இந்தியா 4 வெற்றி பெற ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
* ஆப்கான் 4 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தியா: ரோகித் (கேப்டன்), ஹர்திக் (துணை கேப்டன்), அர்ஷ்தீப், பும்ரா, சாஹல், ஷிவம் துபே, ஜடேஜா, ஜெய்ஸ்வால், கோஹ்லி, குல்தீப், சிராஜ், பன்ட், அக்சர், சாம்சன், சூரியகுமார்.

ஆப்கான்: ரஷித் கான் (கேப்டன்), குர்பாஸ், ஒமர்சாய், பரீத் அகமது, ஃபரூக்கி, குல்பாதின், ஹஸ்ரதுல்லா, இப்ராகிம் ஸத்ரன், கரிம் ஜனத், முகமது இஷாக், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரன், நங்கெயாலியா கரோட்டே, நவீன் உல் ஹக், நூர் அகமது.

The post சூப்பர்-8 சுற்றில் இன்று: இந்தியா – ஆப்கான் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: