கன்னிவாடி வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இல்லை-நீல மார்மன் பட்டாம்பூச்சியை கண்டு வனக்காப்பாளர்கள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி : கன்னிவாடி வனப்பகுதியில் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் புலிகள் நடமாட்டம் இல்லை என தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் வனக்கோட்டத்தில் தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதலின்படி, முதல்கட்ட மழைக்காலத்திற்கு முந்தைய பறவைகள், விலங்குகள் மற்றும் இதர உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபுவின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, வத்தலக்குண்டு, சிறுமலை, அய்யலூர், நத்தம், அய்யலூர் வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் கன்னிவாடி வனப்பகுதியில் உயிரியல் அறிஞர்கள் பீட்டர், பிரேம் சக்கரவர்த்தி, மகேஷ்குமார் தலைமையில் வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அப்போது செந்நாய், மான், சிறுத்தை, யானை, காட்டுமாடு கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாறைகள் வழியாக விலங்குகள் சென்றிருப்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது அபூர்வமாக ப்ளு மார்மன் வண்ணத்துப்பூச்சி இருந்ததை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஒரு வனம் செழிப்பாக இருந்தால் அப்பகுதியில் ப்ளு மார்மன் வண்ணத்துப்பூச்சி இருக்கும். இதுபோல கன்னிவாடி வனப்பகுதி செழிப்பாக இருப்பதால் இங்கு ப்ளு மார்மன் வண்ணத்துப்பூச்சி அதிகமாக காணப்படுகிறது. இதுபோல் கன்னிவாடி வனப்பகுதியில் செந்நாய், மான், சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளன. புலி நடமாட்டம் இல்லை. திண்டுக்கல் வனக்கோட்டத்தில் அறிவியல் முறை ஆய்வு செய்யப்பட்டு எத்தனை  புலிகள் மற்றும் உயிரினங்கள் இருப்பதை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: