10 ஆண்டாக எந்த பராமரிப்பும் இல்லை பழுதடைந்து பயன்படுத்த முடியாத சேலம் வீட்டு வசதி வாரிய வீடுகள்-அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பு

சேலம் : சேலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் பாழடைந்து வரும் அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

சேலம்-ஏற்காடு சாலையில் வின்சென்ட், காந்திரோடு, அஸ்தம்பட்டி, சேலம் நீதிமன்றம், அய்யந்திருமாளிகை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், அரசு கலைக்கல்லூரி, சுற்றுலா ஆய்வு மாளிகை, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மத்திய சிறைச்சாலை, சேலம் மாநகர காவல் ஆணையர் மாளிகை, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா, மாவட்ட முதன்மை நீதிபதி பங்களா உள்பட முக்கிய அரசு மாவட்ட முதன்மை அதிகாரிகள் பங்களா மற்றும் எண்ணற்ற வணிக நிறுவனங்கள் உள்ளன.

அதனால் சேலம்- ஏற்காடு அடிவாரச்சாலையில் எப்போதும் மக்கள் நெருக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்தச்சாலையில் பிரசித்தி பெற்ற அய்யந்திருமாளிகை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 658 கான்கிரீட் மாடி வீடுகள்  கட்டப்பட்டது. இந்த வீடுகளில் அரசு அதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர். இங்கு வீடுகள் கட்டி நடப்பாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த குடியிருப்புகளில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 6 வது ஊதியக்குழுவின்போது வீட்டு வசதி வாரியம் வீட்டு வாடகையை பல மடங்கு உயர்த்தியது. வெளி இடங்களை விட இங்கு வாடகை அதிகரித்து இருந்ததால், அங்கு குடியிருந்த பலர் வீடுகளை காலி செய்துவிட்டனர். இதனால் பூட்டப்பட்ட வீடுகளை கவனிக்காததால் அந்த வீடுகள் எல்லாம் பாழடைந்துவிட்டது.

பராமரிப்பு  இல்லாததால் வீடுகள் முன்புறமுள்ள பால்கனி, சன்செட் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படியும், படிக்கட்டுகள் உடைந்தும், கழிவுநீர் குழாய்கள் உடைந்தும், சுவர்களில் பாசி படர்ந்தும் காணப்படுகிறது. பல வீடுகளில் மேற்கூரை கான்கிரீட் உடைந்தும், சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், கதவு, ஜன்னல்கள் உடைந்தும் காணப்படுகிறது.

வீடுகளின் முன்புறம் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இரவில் கொசுக்களின் படையெடுப்பால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது 75 சதவீத வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அய்யந்திருமாளிகையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை மாற்றி, புதிய திட்டம் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 195 இடங்களில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதில் 60 இடங்களில் உள்ள குடியிருப்புகள் இடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அங்கு எல்லாம் அந்த கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு அதிகாரிகள் பழுதடைந்துள்ள கட்டடங்கள் குறித்து கடந்த மாதம் கணக்கெடுத்தனர். இது சம்பந்தமான முன்மொழிவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘அய்யந்திருமாளிகையில் 658 வீடுகள் உள்ளன. இங்குள்ள கட்டடங்களை கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கடந்த காலங்களில் எத்தனை பேர் குடியிருந்தனர். தற்போது எத்தனை பேர் குடியிருக்கின்றனர் என்ற புள்ளி விபரமும், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது அமைச்சர் குடியிருப்பை பற்றி முழுமையாக தகவல்களை சேகரித்து, அதை அறிக்கையாக தயார் செய்து அனுப்பி வைக்கும்படி கூறினார். இதையடுத்து கடந்த மாதம் பழுதடைந்த வீடுகள், தற்போது குடியிருக்கும் வீடுகளின் நிலை குறித்து அறிக்கையாக தயாரித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தபிறகு தான், தற்போதுள்ள கட்டடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டடங்கள் கட்டுவதா? அல்லது வேறு பணிக்கு அரசு அந்த நிலத்தை பயன்படுத்துகிறதா? என்பது தெரியவரும்,’’ என்றனர்.

Related Stories: