கழுத்தில் ஒரு பட்டாம்பூச்சி!

நன்றி குங்குமம் டாக்டர்

அந்த நடுத்தர வயது பெண்மணி ‘4 நாட்களாகத் தொண்டை வலி’ என்ற பிரச்னையுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரைப் பரிசோதித்தபோது தொண்டையின் முன்பக்கமாக ஒரு வீக்கம் காணப்பட்டது. இது தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ‘இந்த வீக்கம் எத்தனை நாட்களாக இருக்கிறது?’ என்று கேட்டேன். ‘கடந்த ஆறேழு மாதங்களாக’ என்றார். ‘ஏன் இதுவரை இதைக் கவனிக்கவில்லை?’ என்றதும், ‘இதனால் எனக்குத் தொந்தரவு ஒன்றும் இல்லையே, டாக்டர்’ என்று சாதாரணமாகவே பதில் சொன்னார். ‘இது சாதாரண வீக்கம் அல்ல. உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்னை’ என்றதும் அந்தப் பெண்மணி சற்றே கலவரமானார். பதற்றத்துடன் ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டார். ‘தைராய்டு பிரச்னை’ என்றேன்.

‘தைராய்டு என்றால் என்ன, டாக்டர்?’ என கேட்டார். அந்தப் பெண்மணியைப்போல தைராய்டு(Thyroid gland) பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு முதலில் அதை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

கழுத்தில் ஒரு பட்டாம்பூச்சி!

முன் கழுத்தில் தொண்டைப் பகுதியில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கிறது, தைராய்டு. பிறக்கும் குழந்தையில் தொடங்கி மூத்த குடிகள் வரை எல்லோருக்கும் இருக்கிற ஒரு ஹார்மோன் சுரப்பி இது. அதிகபட்சமாக 30 கிராம் எடையுள்ள இந்தச் சுரப்பியில் வலது, இடது என இரண்டு பகுதிகள் உண்டு. இந்த இரண்டையும் இணைக்கிற இஸ்துமஸ்(Isthmus) எனும் சிறு பாலமும் உண்டு. தைராய்டு சுரப்பிக்குள் பாராதைராய்டு (Parathyroid) எனும் மற்றொரு சுரப்பியும் மறைந்திருக்கிறது. இதன் காரணமாக இது ஓர் ‘இரட்டைச் சுரப்பி’ என்று அழைக்கப்படுகிறது.

நமக்கு தைராய்டு சுரப்பி இருப்பது சாதாரணமாக வெளியில் தெரியாது; விரல்களால் தடவிப் பார்த்தாலும் அகப்படாது.  ஏதாவது நோயினால் அது பாதிக்கப்படும்போது வீக்கம் அடையும். அப்போது அது வெளியில் தெரியும். உணவை விழுங்கும்போது இந்த வீக்கம் மேலெழும்பி இறங்கும்.

தைராய்டு என்ன வேலை செய்கிறது?

தைராய்டு சுரப்பியானது தைராக்சின்(T4), டிரைஅயடோதைரோனின்(T3) எனும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, புத்திக்கூர்மை என பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். தைராய்டு செய்யும் இத்தனை செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைராய்டு ஊக்கி ஹார்மோன்(TSH) கட்டுப்படுத்துகிறது. அடுத்து, தைராய்டு சுரப்பி கால்சிடோனின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. உடலில் கால்சியத்தின் அளவை கால்சிடோனின் கட்டுப்படுத்துகிறது. அதே நேரம், பாராதைராய்டு சுரப்பி பாராதார்மோன் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் சத்தைப் பிரித்தெடுத்து ரத்தத்துக்குக் கொடுக்க வேண்டியது பாராதார்மோனின் வேலை.

தைராய்டு வீக்கம் - காரணம் என்ன?

உடல் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்வது தவறு என்று சொல்வதற்கும் ஓர் உறுப்பு இருக்கிறது என்றால் அது தைராய்டாகத்தான் இருக்கும். இன்றைக்கு பலரிடம் தைராய்டு வீக்கத்தை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். தைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அது வீங்கிவிடும். இந்த வீக்கத்தை முன்கழுத்துக் கழலை(Goitre) என்கிறோம். இப்படி தைராக்சின் குறைவாகச் சுரப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதற்காரணம், அயோடின் சத்துப் பற்றாக்குறை. தைராய்டு செல்களில் தைரோகுளோபுலின் எனும் புரதம் உள்ளது. இதில் டைரோசின் எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனைச் சுரக்கின்றன. ரத்தத்தில் அயோடின் குறைந்தால் தைராக்சின் சுரப்பது குறையும். அப்போது தைராய்டு வீங்கும்.

குறிப்பிட்டதொரு நிலப்பரப்பில் உள்ளோர் அனைவருக்கும் இந்த வீக்கம் காணப்படும். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு இவ்வாறு பிரச்னை ஏற்படுகிறது. அங்குள்ள நிலத்திலும் நீரிலும் அயோடின் சத்து குறைவாக இருப்பதால் அங்கு விளையும் உணவுப்பொருள்களைச் சாப்பிடுவோருக்கு முன்கழுத்துக் கழலை ஏற்படுகிறது. இந்த வீக்கத்தை வட்டாரக் கழலை(Endemic Goitre) என்கிறோம். அயோடின் கலந்த சமையல் உப்பு மற்றும் உணவுகளை அதிகமாக்கிக் கொண்டால், இந்த வீக்கம் குறைந்துவிடும். பொதுவாக பெண்கள் பூப்பெய்தும்போதும் கர்ப்பம் அடையும்போதும் அவர்களின் உடல் செல்களுக்கு உணவு மற்றும் வளர்சிதை மாற்றம் சார்ந்த ஆற்றல் தேவைகள் அதிகமாகும். ஆனால், டி3 மற்றும் டி4 ஹார்மோன்கள் எப்போதும் போலவே சுரக்கும். இந்த நேரத்தில் உடலின் தேவையை நிவர்த்தி செய்ய டி3 மற்றும் டி4 ஹார்மோன்களை அதிகம் சுருக்கும்படி TSH ஹார்மோன் தைராய்டு சுரப்பியைத் தூண்டும். அப்போது தைராய்டு வீங்கும். ‘எல்.தைராக்சின்’ மாத்திரையைச் சாப்பிடத் தொடங்கினால் வீக்கம் படிப்படியாகக் குறைந்துவிடும்.

நிரந்தர வீக்கம் ஏன்?

தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களால் பல பெண்களுக்கு தைராக்சின் சுரப்பது நிரந்தரமாகவே குறைந்துவிடுகிறது. அப்போது குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நோய் ஏற்படுகிறது. அதன் பாதிப்பாகவும் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்படுகிறது. அத்தோடு அவர்களுக்கு உடலில் நீர் கோத்துக் கொள்வதும், உடல் பருமனாவதும், முடி கொட்டுவதும், தோல் வறண்டு போவதும் உண்டு. இதற்கும் எல்.தைராக்சின் மாத்திரைதான் தீர்வு.

தைராய்டு அழற்சி நோய்(Thyroiditis) காரணமாகவும் தைராய்டு சுரப்பி வீங்கிவிடும். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Antibodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகின்றன. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, தைராய்டு வீக்கம் உண்டாகிறது.

இவர்களும் எல்.தைராக்சின் மாத்திரைதான் சாப்பிட வேண்டும். இன்னும் சில பெண்களுக்கு தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரந்துவிடும். அப்போது மிகை தைராய்டு(Hyperthyroidism) நோய் வரும். இதனாலும் தைராய்டு சுரப்பி வீங்கிவிடலாம். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். விரல்கள் நடுங்கும். சிலருக்கு கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். இவர்கள் தைராய்டு சுரப்பைக் குறைக்கும் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். பொதுவாக குறை தைராய்டு, மிகை தைராய்டு மற்றும் தைராய்டு அழற்சி காரணமாக ஏற்படும் நிரந்தர வீக்கத்துக்கு பன்கணுக் கழலை(Multinodular goitre) என்று பெயர். இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் அதிக தொல்லை தரும். என்றாலும், இவற்றால் பெரிதாக ஆபத்து ஏதுமில்லை.

தைராய்டு அடினோமா கட்டி

தைராக்சின் ஹார்மோனோடு தொடர்பு இல்லாமலும் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்படுவதுண்டு. அடினோமா(Thyroid Adenoma) கட்டி இதற்கு ஓர் உதாரணம். இது சாதாரண கட்டிதான். இதனால் பயமில்லை. நான் ஆரம்பத்தில் சொன்ன பெண்மணிக்கு இந்த வகை கட்டிதான் இருந்தது. சிறிய அறுவை சிகிச்சையில் கட்டி குணமாகிவிட்டது. இன்னும் சிலருக்கு பிறவிக்குறையாக தைராய்டு உள்ள இடத்தில் ஒரு நீர்க்கட்டி உண்டாகும். இதற்கு தைராகிளாசல் சிஸ்ட்(Thyroglossal cyst) என்று பெயர். இதையும் அறுவை சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம். அடுத்து சொல்லப்போகும் தைராய்டு வீக்கம்தான் ஆபத்து மிகுந்தது. அதாவது, புற்றுநோய் சார்ந்தது. சமயங்களில் சாதாரண கட்டிதானே என்று அலட்சியமாக இருக்கும்போது அது புற்றுக்கட்டியாக மாறி ஆபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் தைராய்டு வீக்கத்திலும் எச்சரிக்கை தேவை என்கிறோம்.

தைராய்டு புற்றுநோய் வயது வித்தியாசம் பாராமல் வரக்கூடியது தைராய்டு புற்றுநோய். அதுபோல் இது ஆணுக்கும் வரும்; பெண்ணுக்கும் வரும். பொதுவாக, குழந்தைப் பருவத்தில் கழுத்துப்பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தால், அதன் பக்கவிளைவாக இந்தப் புற்றுநோய் வருகிறது. அடுத்து, முதிய வயதும் ஒரு காரணமாகிறது. சில சமயங்களில் RET எனும் மரபணு பிழை காரணமாகவும் இது வருகிறது. அப்படி வருமானால்,அவர்களின் வாரிசுகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு.

வகைகள் என்ன?

தைராய்டு புற்றுநோயில் பாப்பிளரி(Papillary), ஃபாலிக்குலர்(Follicular), மெடுல்லரி(Medullary), அனபிளாஸ்டிக்(Anaplastic) என்று நான்கு வகை உள்ளன. வழக்கத்தில் 20 - 30 வயதுள்ளவர்களுக்கு பாப்பிளரி வகை; 30 - 40 வயதுள்ளவர்களுக்கு மெடுல்லரி வகை; 40 - 50 வயதுவர்களுக்கு ஃபாலிக்குலர் வகை; 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனபிளாஸ்டிக் வகை அதிகமாக வருகிறது. மற்ற புற்றுநோய்களைப் போலவே தைராய்டு புற்றுநோயும் முதன்மை பிறப்பிடத்திலிருந்து அருகில் உள்ள உறுப்புகளுக்கு நேரடியாகப் பரவுவதோடு, ரத்தம், நிணநீர் வழியாக உடலுக்குள்ளும் பரவிவிடும் ஆபத்து நிறைந்தது.

என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளோடு தைராய்டு செயல்பாடு குறித்த பரிசோதனைகள்(Thyroid profile) மேற்கொள்ளப்படும். கழுத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், தைராய்டு ஸ்கேன், தேவைப்பட்டால் சி.டி./எம்.ஆர்.ஐ. ஸ்கேன்/ பெட் ஸ்கேன் எடுக்கப்படுவதும் உண்டு. கட்டி இருப்பது உறுதியானால் அதன் வகை அறிய ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை(FNAC) கட்டாயம் மேற்கொள்ளப்படும். மேற்சொன்ன பரிசோதனை முடிவுகளிலிருந்து புற்றுநோய் வகை, கழுத்துப் பகுதியில் பரவிய நிலை மற்றும் நோய் நிலையை அறிந்து சிகிச்சை முறையை வகுப்பார்கள்.

சிகிச்சை என்ன?

தைராய்டு புற்றுக்கட்டியின் அளவு 2 செ.மீ.க்குள் இருந்து, கழுத்துப் பகுதியில் பரவாமல் இருந்தால் அது நிலை - 1. கட்டியின் அளவு 2 - 4 செ.மீ.க்குள் இருந்து, உடலில் எங்கும் பரவாமல் இருந்தால் அது நிலை - 2. புற்றுக்கட்டியின் அளவு 4 செ.மீ.க்கும் அதிகமாக இருந்து, கழுத்துப் பகுதியில் பரவியிருந்தால் அது நிலை - 3. புற்றுக்கட்டி கழுத்து முழுவதையும் அடைத்திருந்து, உடலுக்குள்ளும் பரவியிருந்தால் அது நிலை - 4.  எல்லா நிலைகளிலும்  உடனடி சிகிச்சையாக தைராய்டு சுரப்பி முழுவதையும் கட்டியோடு சேர்த்து (Total thyroidectomy) அகற்றிவிடுகிறார்கள். சிலருக்கு தைராய்டு சுரப்பியின் ஏதேனும் ஒரு பாகத்தை மட்டும் (Lobectomy) இஸ்துமஸ் பாலத்துடன் அகற்றுகிறார்கள். அப்போதே கழுத்துப் பகுதியில் உள்ள நிணநீர்க்கட்டிகளையும் அகற்றிவிடுகிறார்கள். பிறகு தேவைக்கேற்ப எல்.தைராக்சின் மாத்திரை தருகிறார்கள். கதிரியக்க அயோடின் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து சிகிச்சை ஆகியவற்றையும் தருகிறார்கள். தைராய்டு புற்றில் பாப்பிளரி வகையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுவிட்டால் 100% குணமாக வாய்ப்பு உண்டு என்பது ஆறுதல் செய்தி.

(படைப்போம்)

அறிகுறிகளை உணர்ந்துகொள்வோம்!

* முன்கழுத்துப் பகுதியில் வீக்கம்.  

* தைராய்டு சுரப்பியில் கட்டி, கட்டியில் வலி.  

* கழுத்துப் பகுதியில் நெறிக்கட்டிகள்.

* குரலில் மாறுதல். குறிப்பாக, கரகரப்பாகப் பேசுதல்.

* பசி குறைவது.

* உடல் சோர்வு.

* உடல் எடை குறைவது.

* முறை தவறிய/ சீரற்ற மாதவிலக்கு. மாதவிலக்கின்போது குறைந்த ரத்தப்போக்கு அல்லது அதீத ரத்தப்போக்கு.

Related Stories:

>