நம் வீடு… நம் ஊர்… நம் கதை…

நன்றி குங்குமம் தோழி

நம் பாரம்பரியம், வரலாறு, மரபு இவை மேல் எனக்கிருந்த ஆர்வத்தின் முயற்சியாக உருவாக்கப்பட்டதுதான் ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’ என்று பேச ஆரம்பித்தார் சென்னை அமைந்தகரையை சார்ந்த திரிபுரசுந்தரி செவ்வேள். கட்டிடக் கலை நிபுணரான இவர் ‘ஸ்டுடியோ கான்க்ளேவ்’ என்ற கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். மேலும் பிரெஞ்சு தூதரகத்தின் முன்னாள் மாணவர். தூதர் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் தூதர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘‘நம்ம ஊரில் சுற்றிப்பார்க்க வெளிநாட்டினர் பலர் வருவது வழக்கம். அவர்கள் சுற்றி பார்க்கும் இடங்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்த இடங்களாக இருக்கும். அவற்றை தவிர தமிழ்நாட்டில் நிறைய பார்க்கக் கூடிய இடங்கள் உள்ளன குறிப்பாக சென்னையில்’’ என்றவர் தன் அமைப்பின் செயல்பாட்டினை விளக்கினார். ‘‘கட்டிடக்கலை படிப்பில் கட்டிடங்கள், அதன் வடிவமைப்பு, பராமரிக்கும் முறை, பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து இருக்கும். செயல் முறை விளக்கத்தின் போது தான் ஆர்வம் அதிகரிக்கும். படிக்கும் காலத்தில் பர்மிங்காம் சென்றபோது அங்குள்ள பாரம்பரியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொண்டேன்.

அப்போது பிரான்சின் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஒரு பிராஜக்ட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை பார்க்க மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். இவைதான் நம் வீடு நம் ஊர் நம் கதை ஆரம்பிக்க முன் உதாரணம். முதலில் கட்டிடக்கலையை பற்றி நண்பர்களுடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் நம் பாரம்பரியம் பற்றி அறிந்து கொண்ேடன். அதன் பிறகு என் பாட்டியின் வீட்டில் இந்த அமைப்பின் முதல் கட்ட வேலையை துவங்கினேன்.

அதை அறிந்த நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அடுத்தடுத்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள். கட்டிடங்களில் இருக்கும் பாரம்பரியம் அதனை மேம்படுத்தும் முறைகளை விவாதிக்க துவங்கினோம். இதில் நமது பாரம்பரியம், மொழி, வாழ்வியல், சமூக வரலாறு, அதை சார்ந்த மக்கள், இதன் மீதான நம்முடைய புரிதல் போன்றவை குறித்த கலந்துரையாடல் நிகழும்’’ என்றவர் 2013ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பு பல திறமைகள், குரல்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஒரே இடத்தில் உருவாக்க ஒரு தளமாக அமைந்ததாக தெரிவித்தார்.

‘‘நம்முடைய வரலாறு, சுற்றுசூழல், சுற்றுப்புற ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில் இசை நிகழ்ச்சி, ராலி, ஒர்க்‌ஷாப்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் அமைப்பின் சார்பாக நடத்துகிறோம். இதில் பல துறைகளை சார்ந்த மாணவர்கள், பாரம்பரியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கலந்து கொண்டு ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடமான சாலைகள், தெருக்களில், ஏன் மருத்துவமனைகளிலும் நடத்தி வருகிறோம்.

நான் இந்த அமைப்பை ஆரம்பிக்க பக்கபலமாக இருந்தது என் பாட்டி. அவங்க என்னிடம், நாம் சாதிக்க நினைக்கும் போது, பல தடைகள் ஏற்படும். அதை எல்லாம் தகர்த்து செய்யும் போது சமூகம் நம் முன் பல கருத்துக்கள், மற்றும் முடிவுகளை முன்வைப்பாங்க. அதையும் தாண்டி முன்னேறி நமக்கான பாதையினை அமைத்துக்கொள்ள வேண்டும்னு சொல்வாங்க. அந்த வார்த்தைகளைதான் இன்று வரை பின்பற்றி வருகிறேன். நகரின் பல்வேறு இடங்களின் பாரம்பரியம், வரலாறுகளை, கதைகள் மூலம் மக்களுக்கு கொண்டு சென்ற போது தான் எனக்கு கதை சொல்லல் மீது ஆர்வம் ஏற்பட்டது.

எங்க அமைப்பின் முதல் கட்டமாக சென்னை மாநகரின் அதிகம் பிரபலமில்லாத, கவனிக்கப்படாத மரபு நடைகளை ஒன்றாக இணைத்துள்ளோம். இங்கு வரும் வெளிநாட்டினருக்கு இங்கிருக்கும் சுற்றுலாத் தளங்களை தவிர்த்து திருவல்லிக்கேணி, அண்ணா நகர் போன்ற இடங்களில் உள்ள வீடுகள், அதன் கட்டிட அமைப்பு, மரபு குறித்து விளக்கினோம். இதன் மூலம் சென்னையில் வசிக்கும் மக்களை குறித்து இவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.

எங்களின் செயல்பாட்டினை புரிந்து கொண்ட சில கட்டிட கலைஞர்கள் முக்கிய இடங்களின் பழைய வரைபடங்கள் மற்றும் அதன் திட்டங்களை எங்களிடம் கொடுத்தாங்க. மேலும் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றினைக்கும் விதமாக இதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். இதுவரை எங்க அமைப்பின் தளத்தில் ஆயிரத்திற்கும் மேலான கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் அதில் சென்னையின் வரலாற்றைப் பற்றி பேசியுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு வருடம் நவம்பர் மாதம் நடைபெறும் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ‘மெட்ராஸ் இன்ஸ்பையர்ட், ‘முற்றம்’ என்ற தலைப்பில் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள், சிறு கைவினை பொருட்களை விற்பனை செய்கிறோம். இதன் மூலம் அந்தந்த கலைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர முடிகிறது.

இதுவரை 112ம் மேற்பட்ட மரபுநடை ஒர்க்‌ஷாப்கள், 512ம் கதை சொல்லுதல், விவாதங்களும் நிகழ்ந்துள்ளது. பழமையான பொருட்கள், கடிதங்கள், வரைபடங்கள், ஓவியங்களுடன் சைகை மொழி நடைப்பயணமும் நடத்தியுள்ளோம்’’ என்ற செவ்வேள், 200 ஆண்டு பாரம்பரியமான மெட்ராஸ் இலக்கிய சங்கத்தின் முதல் பெண் செயலாளர்
என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post நம் வீடு… நம் ஊர்… நம் கதை… appeared first on Dinakaran.

Related Stories: