லிஸி வெலாஸ்கோவெஸ்

நன்றி குங்குமம் தோழி

சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு, மனம் தளரும் மனிதர்களுக்கு மத்தியில், லிஸி வெலாஸ்கோவெஸின் கதை நமக்கு மிகப்பெரும் தன்னம்பிக்கையினைத் தரும்வீடியோ வலைத்தளமான யூ ட்யூப் தளத்தில் “உலகின் குரூரமான பெண்” என்கிற தலைப்பில் லிஸி வெலாஸ்கோவெஸ் நேர்காணல் வெளியிடப்பட்டது. 4 கோடி மக்களால் பார்க்கப்பட்ட இக்காணொளியின் கீழ் சிலர், கொஞ்சமும் மனசாட்சியற்று, மிருகம் என்கிற அளவுக்கு அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி, லிஸிக்கு தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர். இன்னும் சிலரோ, “இவ்வுலகிற்கு நீ செய்யக்கூடிய ஒரே உதவி, ஒரு துப்பாக்கிக் கொண்டு உன்னை நீயே சுட்டுக்கொள்வதுதான்” என்று வக்கிரமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தனர்.

இந்த கேலி கிண்டல்களுக்கு எல்லாம் சற்றும் அசராத லிஸி. ‘‘நான் அழகில்லை என்பதைப் பலமுறை யோசித்திருக்கிறேன். அப்போது, காலை எழுந்ததும் தினமும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்ப்பதற்கே பிடிக்காமல் போகும். ஆனால், என்னுடைய உண்மையான சொரூபம் எதுவென எனக்கு மெல்லப் புலப்பட ஆரம்பித்தது. என் வாழ்வை நானே என் கையிலெடுத்து மாற்றுவது என்பது என்னிடம் மட்டுமே உள்ளது என்பதை உணரவும் ஆரம்பித்தேன்.

ஆனாலும் என் வெளிப்புறத் தோற்றமே எனக்கான அடையாளம் எனவும் முடிவு செய்தேன்’’ என்கிறார் அழுத்தமாக.லிஸிக்கு ஏற்பட்டது மிகவும் அரிதான கொடிய வகை நோய். நோயின் காரணமாய் லிஸியின் உடல் எடை வழக்கமானதாக இல்லாமல் இருந்தது. அவரின் உடம்பில் கொழுப்பு இல்லாதது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான கொழுப்பும் அவர் உடலில் சேராது என்பதே இந்நோயினுடைய உச்சம். அவரது உடலில் அதிகபட்சமாக 29 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. நோயின் காரணமாக தேவையான சக்தியினைப் பெற, 15 நிமிடத்திற்கு ஒருமுறை உணவை எடுக்க வேண்டிய கட்டாயமும் லிஸிக்கு இருந்திருக்கிறது. வலது கண்ணில் அவருக்கு பார்வைக் குறைபாடு வேறு.

தனக்கு ஏற்பட்டிருந்த இந்தக் குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், இது தனக்கு ஒரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு எனவும் நினைத்த இந்த நம்பிக்கை மனுஷி, எந்த நேரமும் சிரித்த முகத்துடன், “என்னால் என் எடையினை கூட்டிக்கொள்ளாமல் விரும்பிய உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட முடியுமே” என பாஸிட்டிவ் சிந்தனையோடு அதையே எனர்ஜியாக மாற்றி ஜோக் அடித்து மகிழ ஆரம்பிக்கிறார்.

லிஸியின் குழந்தைப் பருவத்தில், அவரால் தானாகத் தவழவோ, நடக்கவோ, மற்ற வேலைகளைச் செய்யவோ இயலாது. இருப்பினும் லிஸியின் பெற்றோர் சற்றும் மனம் தளராமல் மகளிடம் உள்ள திறமைகளையும், நற்பண்புகளையும் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். விளைவு, லிஸி விடாமுயற்சியும், போராடும் குணமும் கொண்ட பெண்ணாய் வெளிப்பட்டார்.
முதல் நாள் தான் பள்ளிக்குச் சென்றபோது, பெரிய புத்தகப்பையுடன் தன்னை பார்க்க ஒரு ஆமை போல இருந்தது எனத் தன் இளமைக்கால நினைவுகளை சற்றும் வருத்தப்படாமல் தனது எழுத்தில் விவரிப்பவர், அப்போது தன்னுடன் யாரும் பேச முன்வராமல் தன்னை தனிமைப்படுத்தியதையும், புறக்கணித்ததையும் இதில் நினைவுக்கூர்கிறார்.

“நீ மற்றவர்களை விட சிறியதாகவும், வித்தியாசமான நோயுடன் இருப்பது உண்மைதான். ஆனால், நீ யார் என்பதை உனக்குப் புரிய வைப்பது உன் உடல் உபாதை அல்ல. நீ பள்ளிக்குச் சென்று படித்து, தலை நிமிர்ந்து நீ நீயாக இருப்பதும், உன்னை வடிவமைத்துக் கொள்வதுமே” என்ற தன்னம்பிக்கை விதையினை லிஸியின் பெற்றோர் தொடர்ந்து அவரிடம் சொல்லி, அவருக்குள் அந்த சிந்தனையை விதைத்துக் கொண்டே இருந்திருக்கின்றனர்.

மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாய் தன்னிடம் என்ன இருக்கின்றது என்பதை லிஸி தனக்குள்ளேயே தேடத் தொடங்கி… தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் மூன்று புத்தகங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். கூடவே தன்னம்பிக்கை பேச்சாளராகவும் வலம் வருகிறார்.அவரது புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகள்… “செயற்கை முறையில் அழகு மிளிரும் பிரபலமானவர்களுக்கு மத்தியில், லிஸி வெலாஸ்கோவெஸ் இயல்பாகவும், மாறுபட்டு இருப்பதுடன், அவரது கதை தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஒரு புதுவித ஊக்கத்தை தரும்” என்பதாகும்.லிஸியின் முதல் புத்தகமான ‘லிஸி ப்யூட்டிஃபுல்’ என்ற நூலில், வெளிப்புற தோற்றத்திற்கு சமூகம் தரும் முக்கியத்துவம், அதனால் தான் சந்தித்த இன்னல்களை விவரிக்கிறார். மேலும் லிஸி குழந்தையாய் இருந்தபோது அவரின் தாய் தந்த அறிவுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இருக்கும் லிஸியின் முதல் புத்தகம் அதிக வரவேற்பை அனைவரிடமும் பெற்றது.லிஸியின் இரண்டாவது புத்தகம் ‘பீ ப்யூட்டிஃபுல் பீ யூ’. தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இழந்து நிற்பவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மட்டுமின்றி, குறிக்கோள்களை அமைத்துக்கொள்வது குறித்தும் எழுதியுள்ளார். தீய எண்ண அலைகள், கேலி கிண்டல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் இதில் இவர் விரிவாக விவரித்துள்ளார்.கிண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு எதிராய் போராடும் பிரத்யேக டாக்குமென்ட்ரி படத்திலும் முழுக் கவனத்தை செலுத்தி தயாரித்திருக்கிறார் லிஸி என்கிற இந்த நம்பிக்கை மனுஷி.

தொகுப்பு: மணிமகள்

The post லிஸி வெலாஸ்கோவெஸ் appeared first on Dinakaran.

Related Stories: