குற்ற உணர்வு இல்லாமல் ஆரோக்கிய உணவுகளை சுவைக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

உலகளவில் மிகப்பெரிய பிசினஸ் மார்க்கெட் என்றால் அது உணவகங்கள்தான். காரணம், மக்கள் பலதரப்பட்ட உணவுகளை சுவைக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா என்று சொல்ல முடியாது. எவ்வளவு உணவகங்கள் சுவையாகவும் தரமாகவும் உணவுகள் வழங்கினாலும், அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உணவினை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் வழங்கினால் மக்களும் நாம் ஆரோக்கியமற்ற உணவுகளைதான் சாப்பிடுகிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல், உணவினை மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள். அதை நினைவில் கொண்டுதான் சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘ஈகோ லைஃப்’ என்ற கேஃபே உணவகத்தை அமைத்துள்ளார் ஜிங்கேஷ் புஜாரா. இது முழுக்க முழுக்க ஒரு வீகன் உணவகம்.

‘‘ஸ்டீல் மற்றும் இரும்புதான் எங்க குடும்பத் தொழில். என் அப்பா 1960ல் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். இங்கு சிறிய அளவில் ஒரு ஹார்டுவேர் கடையினை நடத்தினார். காலப்போக்கில் அந்த தொழில் வளர்ந்து இப்போது நாங்க ஸ்டீல் மற்றும் இரும்பு பிசினசில் ஈடுபட்டு வருகிறோம். இது குடும்பத் தொழில் என்பதால், அப்பாவினைத் தொடர்ந்து, நானும் இந்தத் தொழிலை நிர்வகிக்க ஆரம்பித்தேன். குடும்ப பிசினஸ் இருந்தாலும் எனக்கு உணவுத் துறை மேல் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. முதலில் ஆஸ்திரேலியாவில் ஒரு தொழில் அமைத்து அங்கேயே செட்டிலாக விரும்பினேன். ஆனால் அங்கு நான் நினைத்த மாதிரி அமையவில்லை. அதனால் சென்னைக்கே வந்திட்டேன்.

இங்கு முதலில் அமெரிக்க பிராண்டினை சார்ந்த ஒரு உணவினை அறிமுகம் செய்தேன். இரண்டு வருடம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. அந்த உணவகத்தை என்னால் சக்சஸாக நடத்த முடியாமல் போனாலும், அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்களைக் கொண்டு சோல் கார்டன் என்ற உணவகத்தினை துவங்கினேன். இது ஒரு மல்டி குசைன் உணவகம். அதில் ஒரு பகுதியாக வேகன் உணவுகளையும் அளித்து வந்தோம். சென்னையில் மட்டுமே சோல் கார்டன் நான்கு கிளைகளில் இயங்கி வந்தது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மெனுக்களை இதன் மூலம் வழங்கினோம். அந்த சமயத்தில்தான் ஒரே இடத்தில் ஏன் பலதரப்பட்ட உணவுகளை அளிக்க வேண்டும். அதையே பிரித்து தனித்தனி உணவகமாக அமைத்தால் என்ன என்று தோன்றியது. அதில் தோன்றியதுதான் ஈகோ லைஃப்.

இங்கு முழுக்க முழுக்க வேகன் உணவுகளைதான் வழங்குவதால், குற்ற உணர்வு இல்லாமல் ஆரோக்கிய உணவினை சுவைக்கலாம். மைதா, சர்க்கரை, பால் மற்றும் பால் சார்ந்த தயிர், நெய், பனீர் போன்ற உணவுகள் இங்கு கொடுப்பதில்லை. அதற்கு மாற்று உணவுகளைதான் நாம் வேகன் என்று குறிப்பிடுவோம். உதாரணத்திற்கு மாட்டுப்பாலுக்கு பதில் நாம் பாதாம் மற்றும் சோயா பாலினை உபயோகப்படுத்துகிறோம். அதேபோல் மைதாவிற்கு மாற்று கோதுமை அல்லது ரவை.

பனீருக்கு பதில் டோஃபூ, மைதா இல்லாமல் முந்திரி கொண்டு மயோனீஸ். கோதுமை மாவிலும் க்ளூட்டன் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். இப்படி ஒவ்வொரு உணவிற்கும் மாற்று என்ன என்று அறிந்து அதை வழங்கி வருகிறோம். மேலும் இது காபி ஷாப் என்பதால், அங்கு வழங்கப்படும் சாலட்ஸ், ஸ்டார்டர்ஸ், பீட்சா, பாஸ்தா போன்ற உணவுகளை வேகன் முறையில் கொடுக்கிறோம். அதற்கு முக்கிய காரணம் தற்போது மக்களுக்கு ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இளம் தலைமுறையினர் மட்டுமில்லாமல் 40 வயதினை கடந்தவர்களும் இந்த உணவினை சுவைக்க வருகிறார்கள்’’ என்றவர் இங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘சூப், சாலட்ஸ், ஸ்டார்டர்ஸ், டாகோஸ், ராப்ஸ், பிரெட்ஸ் மற்றும் பீட்சா போன்ற உணவுகளை முழுக்க முழுக்க வேகன் முறையில் தயாரிக்கிறோம். மைன்ஸ்ட்ரோன் லோடெட் சூப், இது ஒரு பேலன்ஸ்டு சூப். தக்காளி சூப்பில் பலவித காய்கறிகள் மற்றும் ரவையால் செய்யப்பட்ட பாஸ்தா கொண்டது. பச்சைப் பட்டாணி சூப், ஃப்ரெஷ் பட்டாணியில் தைம், இதர ஸ்பைஸ்கள் மற்றும் தேங்காய்ப்பால் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். சாலட்களில் கிரிஸ்பி போஃபூ ரான்ச் சாலட், மெக்சிகன் வேகன் சாலட், கேல் சீசர் சாலட், கிரீக் காடெஸ் சாலட், ஸ்மோக்ட் கெபாப் காப் சாலட் உள்ளன.

இதில் பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், முந்திரி, பழங்கள் சேர்த்து வழங்குகிறோம். குறிப்பாக மெக்சிகன் வேகன் சாலட்டில் குடைமிளகாயினை நீளமாக நறுக்கி அதனுடன் கீரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் மெக்சிகன் பீன்ஸ் சேர்க்கப்படும். ஸ்டார்டரில் பாப்ரிகா, டிரப்பில் மற்றும் சீஸ் போன்ற ஃபிளேவர்கள் கொண்ட பிரஞ்ச் ஃபிரைஸ், காலிஃபிளவரை மொறுமொறுவென்று வறுத்து அதனை வேர்க்கடலை மற்றும் கோசுசாங் சாஸில் பிரட்டி கொடுக்கிறோம்.

முழுக்க முழுக்க கோதுமை மாவில் செய்யப்பட்ட டாகோஸ். அதில் மஷ்ரூம், டோஃபூ, உருளை போன்றவற்றை ஸ்டப் செய்து வழங்குகிறோம். மேலும் ராப் வகைகளில் பலவித ஃபிளேவர்கள் உள்ளன. பாம்பே சாட்படா ராப், இது ஒரு வகையான ஸ்ட்ரீட் உணவு என்று சொல்லலாம். கோதுமையில் டார்டிலா செய்து, அதனுள் உருளை, புளிப்பு சட்னி, காய்கறிகள் வைத்து கொடுப்போம். சாப்பிடும் போது காரம் மற்றும் புளிப்பு கலந்த சுவையில் இருக்கும். டோஃபூ டிக்கா ராப், டோஃபூ டிக்காவுடன் காய்கறிகள், கிரீன் சட்னி, தந்தூரி மயோனீஸ் சேர்க்கப்பட்டு இருக்கும். இதைத் தவிர மார்கெரிட்டா பீட்சா, டோஃபூ பீட்சா, பீட்சா மிலானோ என காய்கறிகள், ஆலிவ்கள், ஜாலப்பென்னோ சேர்க்கப்பட்ட வேகன் சீஸ் கொண்டு பீட்சாக்களும் உள்ளன.

தற்போது ரைஸ் பவுல் மற்றும் காலை சிற்றுண்டி உணவுகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். காலை சிற்றுண்டி முழுக்க முழுக்க அமெரிக்கன் மற்றும் ஐரோப்பிய உணவுகள் சார்ந்துதான் இருக்கும். அதாவது, பேன் கேக், வேகன் முட்டை (பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவு) போன்ற உணவுகள். அந்தந்த சீசனுக்கு ஏற்ப உணவுத் திருவிழாவும் அமைக்க இருக்கிறோம். தற்போது கோடைகாலம் என்பதால் ேகால்டு பிரஸ்ட் பழச்சாறுகள் கொண்டு வர இருக்கிறோம்.

முழுக்க முழுக்க ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து அமைத்து வருகிறோம். நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் ஏதாவது ஒரு வகையில் கலப்படம் இருக்கிறது. அதைத் தவிர்த்து முற்றிலும் ஆரோக்கிய உணவுகளை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். மேலும் இங்கு உணவுகளை ஆர்டர் செய்த பிறகுதான் அதற்கான காய்கறிகள் நறுக்கப்பட்டு பிறகு சமைக்கப்படுவதால், உணவினை சுவைக்கும் போதே அதன் தரத்தினை தெரிந்து கொள்ள முடியும்’’ என்றவர் இதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஆரோக்கிய முறையில் பாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு என தனிப்பட்ட உணவகம் ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

தொகுப்பு: நிஷா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

The post குற்ற உணர்வு இல்லாமல் ஆரோக்கிய உணவுகளை சுவைக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: