சக்கர நாற்காலியில் எழுந்து நிற்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பலருக்கு இருக்கும் ஒரே ஏக்கம் எழுந்து நிற்க முடியாதா என்பதுதான். யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களாகவே ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் மாற்றுத்திறனாளிகள் கனவு. ஆனால் அதற்கான சாதனங்கள் அவர்களுக்கு இல்லை. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகிறது. அதில் ஒன்றுதான் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக நிற்கும் வகையிலான மின்சார நாற்காலியை உருவாக்கியுள்ளனர். ‘நியோஸ்டாண்ட்’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நாற்காலி இந்தியாவில் இருக்கும் சூழலை மையப்படுத்தியும் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சக்கர நாற்காலியில் உள்ள பட்டனை பயன்படுத்தி அமரும் நிலையில் இருந்து எழுந்து நிற்கும் நிலைக்கு மாற்ற முடியும்.

இதனால் எதிரெதிரே எவருடனும் எழுந்து நின்று உரையாடவும், உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை யாருடைய துணையும் இல்லாமல் எடுக்கவும் முடியும். இது குறித்து மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதனம் மேம்பாடு டி.டி.கே மையத்தின் (TTK Center for Rehabilitation Research and Device Development) தலைவரும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் விவரித்தார். ‘‘உலகெங்கும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெரும்பாலோருக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது.

பெரும்பாலான சக்கர நாற்காலிகள் உட்கார்ந்த நிலையில்தான் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகள், ரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்திற்கு எழுந்து நிற்பது என்பது அவசியமானது. தற்போதுள்ள சூழலில் சக்கர நாற்காலி பயனர்கள் பெரும்பாலும் சில தனிப்பட்ட தேவைகளுக்கு மற்றவர்களையோ அல்லது உபகரணங்களையோ சார்ந்து
இருக்கின்றனர். உடலின் மேல்பகுதி வலுவாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எழுந்து நிற்பது என்பது கடும் சவால்தான்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் நிற்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்னைக்குத் தீர்வுகாண நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் இதற்கு முன்னர் கையால் இயக்கக்கூடிய ‘அரைஸ்’ என்ற வகையில் இந்தியாவின் முதலாவது மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி ‘நியோபோல்ட்’ என்பதை உருவாக்கினோம்.

அந்த சக்கர நாற்காலி கிராம மக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் அரை வட்ட வடிவ சாதனங்களை கைகளினால் சுற்றிக் கொண்டு அதில் உடலின் முழு பலத்தை கொடுத்து மேலே எழுந்து நிற்க முடியும். அப்படி நாங்கள் உருவாக்கிய அந்த சக்கர நாற்காலி பலருக்கும் உதவியாக இருந்தது. அதே நேரம் உடலில் வலுவில்லாதவர்களால் அந்த சக்கர நாற்காலியை பயன்படுத்தி நிற்க முடியாது.

இதனால் அனைவராலும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு சக்கர நாற்காலியை உருவாக்க நினைத்தோம். இதற்காக கடந்த 3 வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தோம். எங்களுடைய ஆய்வின் முடிவில் மின்சார சக்கர நாற்காலியில் ஒரு பட்டன் மூலமாக எழுந்து நிற்கும் வகையிலான ஒரு மோட்டார் சாதனத்தை உருவாக்கினோம்.

நாங்கள் செய்த இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக டாடா எல்க்ஸி தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியின் வாயிலாக நிதியுதவி வழங்கியது. ஐ.ஐ.டி மெட்ராஸின் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான நியோமோஷன் நிறுவனமும் இந்த தயாரிப்பினை சந்தைக்குக் கொண்டுவர உதவ உள்ளது. ‘நியோஸ்டாண்ட்’ மூலம் சிரமமின்றி நீண்டநேரம் உட்காரவும், தேவைப்படும்போது எழுந்து நிற்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவர்கள் நிற்கும் போது உடல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகலான இடைவேளை உள்ள இடங்களிலும் எளிதாகக் கையாள முடியும்படி இதனை அமைத்திருக்கிறோம். மேலும் எவ்வித சிரமமின்றி உட்கார்ந்த பின் எழுந்து நிற்கவும், பின்னர் மீண்டும் உட்காரவும் முடியும். 1000 கிலோ வரை இந்த சாதனம் தாங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

பயனர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகப் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில் புதுமையான அணுகுமுறையை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. படிப்படியாக எழுந்து நின்று பயிற்சிகளை செய்யவும் யாருடைய துணையும் இல்லாமல் தாங்களாகவே ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் இந்த நியோ ஸ்டாண்ட்” என்று பெருமையோடு சொல்கிறார் சுஜாதா ஸ்ரீநிவாசன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post சக்கர நாற்காலியில் எழுந்து நிற்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: