பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

15 வருடங்களாக ஒரேயொரு மெஷின். அதில்தான் வீட்டிற்குத் தேவையான மெழுகுவர்த்தி, கற்பூரம் மற்றும் இதர பூஜைப் பொருட்களை தயாரித்து வந்தார். சின்ன வருமானம் வந்தால் போதும் என்று நினைத்தார். காரணம், தன் குடும்பத்தின் வளர்ச்சிக்கு இந்த வருமானம் கொண்டு உதவ வேண்டும் என்று விரும்பினார். அதனால், வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்ய துவங்கினார். அப்படி தன் தொழிலை ஆரம்பித்தவர், தற்போது பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவி வருகிறார், மதுரையில் உள்ள ‘காதம்பரி பூஜைப் பொருட்களின்’ நிறுவனர் ஜெயசுதா.

‘‘என்னுடைய படிப்பு பன்னிரெண்டாம் வகுப்புதான். பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டாலும், எனக்கு ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. ஆனால் நான் +2க்கு மேல் படிக்கவில்லை. என்னுடைய படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும் என பல முறை நான் யோசித்திருக்கேன். எனக்கு வேலை செய்ய வேண்டும். அதன் மூலம் ஒரு வருமானம் ஈட்ட வேண்டும். அதற்கு நான் மற்றவர்கள் ேபால் ஏதாவது ஒரு நிறுவனத்தில்தான் வேலைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலிருந்தபடியே சிறிய அளவில் ஒரு தொழில் செய்யலாம்னு நினைச்சேன்.

அப்படித்தான் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கலாம்னு ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை என்னுடைய குடும்பத்திற்கு என்னால் முடிந்த அளவில் சிறியதாக வருமானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆரம்பித்தேன். இதற்கான மூலப்பொருட்களை வாங்கினேன். அப்போது என்னிடம் எந்த இயந்திரமும் இல்லை. எல்லாம் கையால்தான் தயாரித்தேன்’’ என பேச ஆரம்பித்தார் ஜெயசுதா.

‘‘ஆரம்பத்தில் நான் தயாரித்த சாம்பிராணியை சிறிய அளவில் பாக்ெகட் செய்து என் வீட்டின் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் எங்களிடம் சாம்பிராணியை வாங்க ஆரம்பித்தார்கள். அதனால் உற்பத்தியை அதிகரித்தோம். அதனைத் தொடர்ந்து சின்னச் சின்ன பூஜை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு கொடுக்க துவங்கினோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் என்னுடைய சாம்பிராணி பிடித்து இருப்பதாக கடை உரிமையாளர்கள் கூறினார்கள்.

மேலும் அவர்கள் சாம்பிராணியுடன் ஊதுபத்திகளும் செய்து தர முடியுமான்னு கேட்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கேட்டதுபோல் பத்து வகையான வாசனைகள் கொண்ட ஊதுபத்திகளை தயாரிக்க துவங்கினோம். அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி, மஞ்சள், குங்குமம் என ஒன்றொன்றாக அதிகரித்து தற்போது 50க்கும் மேற்பட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை நாங்க தயாரித்து வருகிறோம். நான் இந்த தொழில் ஆரம்பித்த போது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் என்னால் செய்ய முடியும் என்ற எனக்குள் இருந்த தன்னம்பிக்கைதான் நான் இந்தத் தொழிலை சக்சஸாக செய்ய காரணம். மேலும் என்னுடைய குடும்பமும் எனக்கு முழு ஆதரவு அளித்தாங்க. இந்தத் தொழிலை துவங்கி 16 வருடங்களாக நல்ல முறையில் செய்து வருகிறேன்’’ என்றார்.

‘‘நான் ஆரம்பித்த போது முதலில் கைகளால்தான் அனைத்தும் தயாரித்தேன். வருமானம் வந்ததும், ஒரு மெஷினை வாங்கினேன். இன்று வரை அதில்தான் கற்பூரம் தயாரித்து வருகிறோம். சிறிய ஆர்டர் என்றாலும் சரி பெரிய ஆர்டராக இருந்தாலும் சரி, அந்த ஒரு மெஷின் மட்டும்தான் தற்போது வரைக்கும் எங்களுக்கு கைகொடுத்து வருகிறது. சாம்பிராணி மற்றும் மெழுகுவர்த்திகளை அச்சு உபயோகப்படுத்தி தயாரிக்கிறோம். இதர பொருட்கள் அனைத்தும் கைகளால்தான் தயாரிக்கிறோம்.

இங்கு என்னோடு மொத்தம் 7 பெண்கள் மற்றும் என் கணவர் என மொத்தம் 9 பேர்தான் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறோம். சிலரால் இங்கு வந்து வேலை செய்ய முடியாத நிலை என்பதால், அவர்கள் வீட்டில் இருந்தபடியே எங்களுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள். காலை 10 மணிக்கு வேலையை ஆரம்பிப்போம். இரவு ஏழு மணி வரை பூஜைப் பொருட்களின் தயாரிப்புக்கான வேலை நடக்கும். வேலை செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கொடுக்கிறோம்.

அதனை மாதம் கொடுக்காமல் ஒவ்வொரு வாரமும் கணக்கிட்டு கொடுத்திடுவோம். நான் இந்த தொழில் ஆரம்பிக்கும் போது என்னிடம் பெரிய அளவில் பணம் எல்லாம் கிடையாது. கையில் இருந்த 1000 ரூபாய்க் கொண்டுதான் இந்த ெதாழிலை ஆரம்பித்தேன். தற்போது ஓரளவிற்கு எங்களால் லாபம் பார்க்க முடிகிறது. அதைக் கொண்டுதான் ஒவ்வொரு பொருளாக நாங்க உற்பத்தி செய்ய துவங்கினோம்’’ என்றவர் பூஜைப் பொருட்கள் தயாரிக்க காரணம் பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக பூஜைப் பொருட்களை நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்துவது வழக்கம். அதுக்கேற்பதான் நாங்க இங்கு பொருட்களை தயாரிக்கிறோம். சில சமயம் விளக்கு பூஜை போன்ற நாட்களில் குங்குமம் தயாரிப்பினை அதிகரிப்போம். கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலில் பூஜை இருக்கும் என்பதால், அந்த நேரங்களில் கற்பூரம், சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகள் அதிகம் விற்பனையாகும். அந்த சமயம் ஆர்டரின் பேரில் பொருட்களின் தயாரிப்பும் அதிகமாகும். ஒரு சாம்பிராணி 7 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து தற்போது 12 சாம்பிராணி கொண்ட பேக் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

சில பொருட்கள் அதன் தயாரிப்புகளுக்கு ஏற்ப விலை மாறுபடும். நாங்க தரமான பொருட்கள் கொடுப்பதால், மக்களும் அதைப் பார்த்துதான் எங்களின் பொருட்களை வாங்குகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பூஜை பொருட்கள் விற்பனையாகும் கடைகளுக்கு நாங்கதான் பொருட்களை சப்ளை செய்து வருகிறோம். அதைத் தவிர வீடுகளுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். மேலும் தேவாலயங்களுக்கும் இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள்தான் விற்பனையாகிறது. மதுரை மட்டுமல்லாது மற்றும் சில மாவட்டங்களிலும் எங்களின் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆரம்பத்தில் குறைந்த அளவு தயாரிப்பு என்பதால், நான் மட்டுமே இதனை பார்த்து வந்தேன். என் கணவர் கடைகளுக்கு எல்லாம் பொருட்களை சப்ளை செய்திடுவார். அந்த வேலைக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில் அவரும் என்னுடன் உற்பத்திக்கான வேலையில் ஈடுபடுவார். ஆர்டர்கள் அதிகரிக்க ஆரம்பித்ததும், தனியாளாக என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் வேலைக்கு ஆட்களை நியமித்தோம். மேலும் என் கணவர் பூஜைப் பொருட்களை தயாரிப்பதில் மட்டுமல்லாமல் அதனை மார்க்கெட்டிங் செய்வதிலும் எனக்கு உதவியாக இருந்து வருகிறார்.

என்னிடம் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் பெண்கள்தான். அவர்களை நியமிக்க காரணம் என்னைப் போல பல பெண்களும் தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தின் தேவைக்காகவும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள், அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர விரும்பினேன்’’ என்றவர், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றியும் விளக்கினார். ‘‘ஒரு நாளைக்கு 60 கிலோ வரை கற்பூரம் ரெடி செய்கிறோம். இன்று கற்பூரம் தயாரித்தால், மறுநாள் மெழுகுவர்த்தி உற்பத்திக்கான வேலை நடக்கும்.

இப்படி பிரித்துதான் தயாரிப்போம். தாழம்பூ குங்குமம், பஞ்சகவ்யம் விளக்குகள், சந்தனம், சந்தனாதி தைலம், தசாங்க பவுடர், ஜவ்வாது, பன்னீர் என ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறோம். இதற்கான மூலபொருட்களை சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற பல மாவட்டங்களில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் வாங்கிக் கொள்கிறோம். மெழுகுவர்த்திக்கு தேவையான மூலப்பொருட்கள் ஆந்திராவில் இருந்து வருகிறது. மற்ற பொருட்களை விட மெழுகுவர்த்திகள் தயாரிப்பதுதான் கடினமான வேலை. இதனை தயாரிக்கப்படும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அதனால் அதை தயாரிக்கும் போது மட்டும் மின்விசிறி இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அது சீக்கிரம் கெட்டியாகும்.

கற்பூரம் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பில் தேங்காய் எண்ணெயின் பங்கு அதிகம். இதில் கிடைக்கும் பணத்தில் ஆட்களுக்கான சம்பளம், மின் கட்டணம் போக குறைந்த அளவில்தான் லாபம் கிடைக்கும். பலர் ‘குறைந்த லாபத்தில் எப்படி பொருட்களை விற்பனை செய்றீங்க’ன்னு கேட்பாங்க. எங்களைப் பொறுத்தவரை நல்ல தரமான பொருட்களை நியாயமான விலையில் கொடுக்க வேண்டும் என்பதுதான். சிறிய லாபம் கிடைத்தாலும் மனத் திருப்தி கிடைக்கிறது. எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான். எங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும். அதனால் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்’’ என புன்னகையுடன் பதிலளித்தார் ஜெயசுதா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்: வெற்றி

The post பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: