தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!

நன்றி குங்குமம் தோழி

முத்தமிழ் என்று சொல்லப்படும் ‘இயல், இசை, நாடகத்தில்’ மூன்றாவதாக உள்ள நாடகத்தை கூத்து எனவும் பல கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ‘‘கூத்தாட்டு அவைக்கறம்’’ (திருக்குறள்), ‘‘கூத்தர் ஆடுகளம் கடுக்கும்’’ (புறநானூறு), ‘‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’’ (சிலப்பதிகாரம்) என்று சங்க இலக்கியங்களில் பல வகையாக குறிப்பிடப்படும் இந்த கூத்தும் நம்முடைய ஒருவகை பாரம்பரிய கலை என்று இளம் தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.

திருவிழா காலங்களில் தெருக்களில் நடத்தப்படும் இந்த கூத்துகள், ஒரு சில காலங்களில் மட்டுமே நடைபெறுவதால் தற்போது அழிந்து வரும் ஒரு கலையாக மாறியுள்ளது. இதனை மீட்டெடுக்கும் விதமாக 20 வருடங்களுக்கு மேலாக இந்தக் கலையில் காலூன்றி, தனக்கென அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சார்ந்த திலகவதி பழனி.

‘‘கூத்து’ என்பது கதை, பாடலுடன் கூடிய நாடகம் என்பது நாம் அறிந்ததே. பலவிதமாக நடைபெறும் இந்த கூத்து நம்முடைய பாரம்பரிய கலைகளில் ஒன்று. மேட்டுமுள்ளுவாடி தான் நாங்க வசிக்கும் கிராமம். எங்களுடைய குடும்பம் ஒரு கலைக் குடும்பம். எங்க தாத்தா, அப்பாவின் சகோதரர்கள் அனைவரும் கூத்துக் கட்டுவதில் சிறந்தவர்கள். அவர்களை பார்த்துதான் எனக்கு இந்தக் கலையின் மேல் ஆர்வம் வந்தது. என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த என் சித்தப்பாதான் எனக்கு கட்டைக்கூத்து சொல்லிக் கொடுத்தார்.

அதன் பிறகு நான் முறைப்படி எங்க குருவான ராஜகோபால் அவர்களிடம் கற்றுக் கொண்டேன். இதற்கு சிறப்பு பயிற்சி நிலையங்கள் எல்லாம் கிடையாது. குருவும் அவரின் மனைவியும் இணைந்து காஞ்சிபுரத்தில் துவங்கியதுதான் இந்த கட்டைக்கூத்து குருகுலம். இங்கு தங்கிதான் இதற்கான பயிற்சியை மேற்கொள்ள முடியும். இதில் என் சித்தப்பாவும் ஒரு ஆசிரியர். அவரிடம் சேர்ந்துதான் இதனை பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். அங்கு 20 மாணவர்கள். நான் மட்டும்தான் ஒரே ஒரு மாணவி. மூன்று மாதப் பயிற்சிக்கு பிறகு இறுதியாக ராஜகோபால் சாரிடம் நாங்க பயின்றதை நடித்துக் காட்டினோம். பின் எனது விருப்பப்படி அங்கு தங்கி கட்டைக்கூத்தை 8 வருடம் பயின்றேன். இப்படித்தான் என்னுடைய கூத்துப் பயணம் துவங்கியது.

குருகுலத்தில் 21 பேரில் என்னை சேர்த்து 3 பெண்கள். நாங்க மூவருமே கூத்து கட்டும் குடும்பத்தை சார்ந்தவர்கள். எங்க மூவரைத் தவிர வேறு சில பெண்களும் இங்கு பயிற்சிக்கு வந்தாங்க. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் அவர்களை தொடர்ந்து பயிற்சி எடுக்க அனுமதிக்கவில்லை. அவர்களைப் போல் என்னையும் விலக சொன்னார்கள். காரணம், பெண் என்றால் ஒரு வயதிற்கு பிறகு திருமணம், குடும்பம் என்று இருக்க வேண்டும்.

அவர்களுக்கான கனவினை அவர்கள் அடையக்கூடாது. நான் ஒரு கூத்து கலைஞராக பல தடைகளை சந்தித்துதான் இந்த துறையில் கால் தடம் பதித்திருக்கேன். எங்க வீட்டில் எனக்கு முழு ஆதரவு கொடுத்தாலும், உறவினர்கள் மற்றும் கிராமத்தில் உள்ளவர்கள் இதனை ஏற்கவில்லை. சமூகத்தை பொறுத்த வரைக்கும் ஒரு பெண் என்றால், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத நியதியாக இருந்தது. இன்றும் இருக்கிறது.

இந்த கோட்பாட்டால் பல பெண்கள் தங்களின் கனவுகளை தியாகம் செய்கிறார்கள். ஆனால் எனக்கு என் கனவு முதன்மையாக இருந்தது. பல தடைகளை தாண்டி தான் அதனை அடைந்தேன். குறிப்பாக கட்டைக்கூத்தில் முதல் பெண் கலைஞராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், என் குடும்பத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், இப்போது நானும் என் சகோதரியும்தான் கூத்துக் கட்டும் கலையை செய்து வருகிறோம். பல இடங்களில் இருவரும் இணைந்து கூத்துக் கட்டியிருக்கோம்’’ என்றவர் தனக்கு கிடைத்த அங்கீகாரங்களை பற்றி குறிப்பிட்டார்.

‘‘நான் 11 வயதிலிருந்து இந்தக் கலையை பயின்று வருகிறேன். ஒரு வருடம் 130 – 150 கூத்துகள் நடத்துவோம். தமிழகத்தின் முதல் கட்டைக்கூத்து பெண் கலைஞர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. முதல் இடம் என்பது எளிதில் யாருக்கும் கிடைக்காது. அது எனக்கு கிடைத்ததோடு, இந்தக் கலை மூலம் சமூக நலம் சார்ந்து பல விஷயங்களை மக்கள் முன் கொண்டு போக முடிகிறது. அது எனக்கு சந்தோஷம் தான். 2023-ல் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் என்ற தேசிய விருதை நான் பெற்ற போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும்.

அந்த விருது என்னுடைய கலைக்கு கிடைச்ச பெரிய பரிசு. நாங்க ஒவ்வொரு ஊருக்கும் கூத்துக் கட்ட போகும் போது, அங்கிருக்கும் மக்கள் எங்களை அவங்க வீட்டுப் பொண்ணாக ரொம்ப அன்பா பார்த்துப்பாங்க. இந்த கலைக்குள் பெண்கள் வரக்கூடாது என்ற காலம் மாறி எங்களுக்கு என தனிப்பட்ட பெண் ரசிகர்களை பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கும்.  இன்றும் எங்க உறவினர்கள் எல்லோரும் எனக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாக இருக்காங்க.

ஆனால் எனக்கு இந்தக் கலையை தவிர தற்போது வேறு எதை பற்றியும் சிந்திக்க நேரமில்லை. ஒரு சிலர் இதை வருமானம் கொடுக்கும் ஒரு வேலையாகத்தான் பார்க்கிறாங்க. இது ஒரு கலை என யாரும் நினைப்பதில்லை. அப்படி நினைத்து இருந்தால் அழிந்து வரும் நம் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவே பல கலைஞர்கள் உருவாகி இருப்பாங்க. பரதத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்தக் கலைக்கு கொடுப்பதில்லை. சொல்லப்போனால் சங்க இலக்கியங்களில் வரும் குறவஞ்சி கதாப்பாத்திரமும் இந்தக் கலையின் ஓர் ஆரம்பமே’’ என்றவர் தான் விரும்பி ஏற்கும் கதாப்பாத்திரத்தை பற்றி விளக்குகிறார்.

‘‘குறவஞ்சி நாடகம், அதில் மகாபாரதத்தில், திரௌபதி நாடோடியாக மாறி செல்லும் ஒரு கதாப்பாத்திரம். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் எனக்கு பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கு. பலர் நான் தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று கூத்து கட்டணும்ன்னு கேட்பாங்க. பகடை துகிலோடு திரௌபதியின் பகுதி. அதில் எனக்கு இரண்டு மணி நேரம் தான் என்றாலும், அதில் வரும் பாட்டு, கேள்விகள் அனைத்தும் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும்.

இது போக கிருஷ்ணன், சகுனி, பலராமன் போன்ற குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்திருக்கேன். அந்த காலத்தில் ஆண்களே பெண் வேடமணிந்து நடிப்பாங்க. இப்போது பெண்கள் ஆண் வேடம் தரித்து நடிக்க முன் வராங்க. நானும் ஒரு சில ஆண் கதாப்பாத்திரங்களில் நடிச்சிருக்கேன்’’ என்றவர் கூத்திற்கு ஆண்-பெண் பேதமில்லை என்பதனையும் குறிப்பிட்டார். மேலும் தனது நாடக பள்ளியை பற்றி விளக்கியதோடு, கல்வி மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றியும் விவரிக்கிறார் திலகவதி.

‘‘கிருஷ்ணா கட்டைக்கூத்து குழு’ என்ற பெயரில் கடந்த 9 வருடமாக நாங்க நாடக பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறோம். இந்த மையத்தின் இணை நிறுவனர் மற்றும் நாடக கலைஞராகவும் இருக்கிறேன். இதன் சிறப்பம்சம், ஆண்-பெண் இணைந்து நடத்தும் ஒரு நாடகப் பள்ளி இது. பெரும்பாலும், இந்தக் கலையில் இருப்பவர்கள் படிக்காதவர்கள் அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களாகத்தான் இருப்பாங்க என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இங்கு பயிற்சி அளிப்பவர்கள் அனைவரும் பட்டதாரிகள்தான். இரண்டு பட்டங்கள் பெற்றவர்களும் இங்குள்ளனர். ஒரு சிலர் படித்துக் கொண்டே கலையிலும் ஈடுபட்டு வராங்க.

நான் 5வது வரைக்கும் அரசுப் பள்ளியில் படித்தேன். பிறகு தொலை தூர கல்வி மூலம் 10ம் வகுப்பு வரை முடித்தேன். தற்போது தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர முயற்சி செய்து வருகிறேன். இந்தக் கலையை மட்டும் நான் கற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தன்னம்பிக்கை, தைரியம் இரண்டையும் கற்றுக் கொண்டேன். வருடத்தில் 100க்கும் மேற்பட்ட கூத்து நடத்தினாலும், பத்து மாதத்திற்கு எங்களுக்கு வேலையே இருக்காது.

இந்த கூத்துகள் மார்கழி மாதம் போன்ற சீசன்களில் தான் அதிகம் நடக்கும். ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வருமானமும் இருக்காது. இசைக் கச்சேரிகளை நடத்தும் சபாக்கள் இது போன்ற பாரம்பரிய கலையினையும் நடத்தி வந்தால் அழிவிலிருந்து இந்தக் கலைகளை மீட்பது மட்டுமல்லாது, எங்களை போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்’’ என வேண்டுகோள் வைக்கிறார் திலகவதி.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்! appeared first on Dinakaran.

Related Stories: