பனை ஓலை கைவினைப் பொருட்களில் வருமானம் பார்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள். பல துறையில் தங்களின் கால்களை பதித்து வருகிறார்கள் என்றெல்லாம் நாம் சொல்கிறோம். கண்டிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் படிக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். சிலர் படித்திருந்தாலும் வேலைக்கு போக முடியாத காரணத்தால் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கான சம்பாத்தியத்தை ஈட்டி வருகிறார்கள். நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களும் சிகரங்களை தொடுவார்கள். அதற்கு உதாரணமாக இருந்து வருகிறார்கள் தஞ்சாவூர் மாநிலம் பாபநாசத்தில் உள்ள அண்ணப்பன்பேட்டை கிராமத்தை சேர்ந்த தாய் மகளான சித்ரா மற்றும் ரசிகா. இவர்கள் பனை ஓலையைக் கொண்டு பலவிதமான பொருட்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்கள்.

‘‘எங்களுடையது விவசாய குடும்பம். அம்மா இல்லத்தரசி. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலைப் பட்டம் முடிச்சிருக்கேன். என் அண்ணன் படிப்பு முடிச்சிட்டு வேலைக்கு போறாங்க. இதுதான் எங்க குடும்பம்’’ என்று பேசத் துவங்கினார் ரசிகா.

‘‘அம்மா இங்குள்ள ஒரு மகளிர் குழுவில் உறுப்பினரா இருந்தாங்க. அவங்க குழுவிற்கு SST அமைப்பு பனை ஓலைகள் கொண்டு கைவினைப் பொருட்கள் சொல்லித் தருவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் ஏற்படுத்தித் தருவதாக கூறினார்கள். அம்மாவும் வீட்டில் சும்மா இருப்பதற்கு இது போன்ற கைவினைப் பொருட்களை தயாரித்து அதில் ஒரு சிறிய அளவில் வருமானம் பார்க்கலாம்னு நினைச்சாங்க. அவங்க தான் முதலில் செய்ய கத்துக்கிட்டாங்க. அவங்களிடம் இருந்துதான் நான் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு நான், அம்மா மற்றும் எங்க உறவினர் ஒருவர் என மூவரும் இணைந்து தனியாக ஒரு மகளிர் குழுவினை துவங்கினோம். அதில் தற்போது 12 ெபண்கள் உறுப்பினரா இருக்காங்க. இப்ப நாங்க தனியா ஆர்டர் எடுத்து பனைப் பொருட்களை செய்து வருகிறோம்’’ என்றவர் தனியாக மகளிர் குழுவினை அமைத்த காரணத்தை விவரித்தார்.

‘‘எங்க கிராமத்தில் நிறைய பெண்களுக்கு சுயமாக வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அதனால் அவர்களில் பலர் இதை கற்றுக் கொள்ள முன் வந்தாங்க. மேலும் ஒரே குழுவில் அனைவரும் இருக்கும் போது வரும் ஆர்டர்களை பிரித்து செய்ய முடியாது. அதனால் நாங்க தனியாக குழு அமைத்து செயல்பட ஆரம்பித்தோம். முதலில் SST அமைப்பு மூலமாகத்தான் எங்களுக்கு ஆர்டர் வந்தது.

அதன் பிறகு என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாங்க செய்யும் பொருட்கள் குறித்து தெரிவித்தேன். அவர்களும் ஆர்டர் கொடுத்தாங்க. அவர்களை தொடர்ந்து அவர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என பலர் ஆர்டர் கொடுக்க முன்வந்தாங்க. நாங்க பனை ஓலையில் 15 முதல் 20 வகையான பொருட்களை தயாரிக்கிறோம். இதில் பெரும்பாலும் கூடை, ஓலைப் பெட்டிதான் செய்வாங்க. நாங்க அப்படி இல்லாமல் இடியாப்பம் வேக வைக்கும் தட்டு, பூச்சாடி, அலங்கரிக்கும் பொருட்கள் செய்வதால், அனைத்தும் வித்தியாசமாக இருப்பதாக கூறி ஆர்டர் வருகிறது.

முதலில் பனை ஒலையினை வெட்டி அதை காயவைப்போம். அதன் பிறகு அதனை தனித்தனியா பிரிச்சு எடுப்போம். அடுத்து வண்ண நிறங்கள் சேர்த்து விரும்பும் டிசைன்களில் ஓலைகளை பின்ன துவங்குவோம். இதில் இந்தக் காலத்திற்கு ஏற்ப டிரண்டிங்கான வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை செய்யலாம். அதனால் பலரும் அதை விரும்பி வாங்குகிறார்கள். திருமணம் மற்றும் விசேஷ நாட்களுக்கு தாம்பூலப்பையுடன் குங்குமம், மஞ்சள் கொடுப்பது வழக்கம். குங்குமம் மற்றும் மஞ்சளை போட்டு வைக்கக்கூடிய சின்ன டப்பாக்களுக்கான ஆர்டர் தான் எங்களுக்கு அதிகம் வரும். எங்க ஊர் மட்டுமில்லாமல் காரைக்குடியில் இருந்தும் ஆர்டர் கொடுக்கிறாங்க.

தற்போது அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற ஷாப்பிங் இணையத்திலும் எங்களின் பொருட்கள் விற்பனைக்கு இருக்கு. குழுவில் உள்ள பெண்கள் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்ப்பதால், வரும் ஆர்டர்களை அவர்களுக்கு பிரித்து கொடுத்திடுவோம். அம்மாவிற்கு இதை பெரிய அளவில் கொண்டு வரணும்ன்னு ஆசை. அதன் முதல் கட்டமாகத்தான் நாங்க ஷாப்பிங் தளங்களுடன் இணைந்தது. இதன் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் ரசிகா.

தர்மராஜ், SST அமைப்பு

‘‘இந்த கிராமத்தில் பனை மரம் அதிகமா இருக்கும். அதனால் தான் நாங்க இங்கிருக்கும் பெண்களுக்கு பனை ஓலை மூலம் கைவினைப் பொருட்களை செய்ய சொல்லிக் கொடுக்க முடிவு செய்தோம். கிராமத்தில் பெண்களை இணைப்பது சுயஉதவிக்குழுக்கள் என்பதால், அந்தக் குழுக்களை அணுகி அதில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்தோம். பயிற்சி எடுத்தவர்கள் இதனை ஒரு தொழிலாக செய்ய முன்வந்தார்கள்.

அதனால் அவர்களின் பொருட்களுக்கு நாங்க மார்க்ெகட்டிங் செய்து கொடுத்தோம். இப்போது அவர்களே ஆர்டர்களை பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதற்கு உதாரணமாக வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவர்களின் ஆர்வத்ைத அறிந்து கொண்டு இதனை ஒரு பிசினஸ் மாடலாக அமைக்க இருக்கிறோம். அதன் முதல் கட்டம்தான் ஷாப்பிங் இணையத்தில் இதனை விற்பனை செய்ய துவங்கி இருக்கிறோம். இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும்.’’

தொகுப்பு: நிஷா

The post பனை ஓலை கைவினைப் பொருட்களில் வருமானம் பார்க்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: