வாரவிடுமுறை நாட்களில் களைகட்டும் சங்குதுறை பீச்-அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிக்கை

நாகர்கோவில் :  சங்குதுறை பீச்சிற்கு வாரவிடுமுறை நாட்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சங்குதுறை பீச்சில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குமரி மாவட்டத்தில் சுற்றுலதலங்கள் அதிகம் உள்ளன. வாரவிடுமுறை நாட்களில் இத்தலங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிவது வழக்கமாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் இல்லாததால், இந்த சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது சங்குதுறை பீச்சில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

 இந்த சங்குதுறை பீச்சில் அப்பெயரை பறைசாற்றும் வகையில் கடற்கரை நுழைவாயிலில் ராட்சத சங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தவிர பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை, சிறுவர் பூங்கா மற்றும் காட்சி கோபுரம் ஆகியவை இருந்தது. மேலும் கடற்கரையில் பயணிகள் அமர்ந்து இருக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

 கடந்த சில வருடத்திற்கு முன்பு வீசிய ஓகி புயலின் போது சங்குதுறை பீச்சில் போடப்பட்டு இருந்த இருக்கைகள், சிறுவர் பூங்கா, காட்சி கோபுரங்கள், கழிப்பறைகள் சேதமடைந்தன. இந்நிலையில் இங்கு பொதுமக்களின் வருகை அதிகரித்து வருவதால் அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும், காட்சிகோபுரத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சிதலம் அடைந்த காட்சி கோபுரம் அகற்றப்பட்டது.

சங்குதுறை பீச்சிற்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை மணலில் அமர்ந்து இயற்கை எழிலை ரசிப்பதோடு, தங்களது குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்த்து விட்டு அங்கிருந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து சங்குதுறை பீச்சில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளம் பஞ்சாயத்து தலைவர் ஆன்றனி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சங்குதுறை பீச்சில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தது. இயற்கை சீற்றத்தால், இருக்கைகள், கழிப்பறைகள் பழுதாகியது. கொரோனா காலகட்டத்தின் போது பொதுமக்கள் இருவருடம் பொது இடங்களுக்கு அதிக அளவு வரவில்லை. தற்போது சங்குதுறை பீச்சில் அதிக அளவு மக்கள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை செயல்படுத்திக்கொடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் போது மேலும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். மேலும் சங்குதுறை பீச்சில் உள்ள பிரமாண்டமான சங்கை பராமரித்து, அதன் கீழ் பகுதியில் காங்கீரிட் போட்டு, அழகுபடுத்தி வைக்க வேண்டும் என்றார்.

Related Stories: