5 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் 8 ஆயிரம் அரிசி ஆலைகள் மூடல்: 35,000 கடைகள் அடைப்பு; ரூ.600 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு; ஆந்திராவிலும் போராட்டம் நடத்த முடிவு

சேலம்: ஒன்றிய அரசு, அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள்  அடைக்கப்பட்டது. 8ஆயிரம் அரிசி ஆலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக  நேற்று ஒரே நாளில்  ரூ.600 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் போராட்டம் நடத்த அரிசி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரிமுறையை கொண்டு வந்தது. அப்போது, 50 சதவீத பொருட்களுக்கு 3, 5, 12, 18, 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி சண்டிகரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்பட பல பொருட்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. மேலும் பல பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டியில், கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு இப்போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்தும், வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நேற்று அரிசி வணிகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் அரிசி ஆலைகள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மூடப்பட்டன. 35 ஆயிரம் கடைகளை அடைத்து, மொத்த அரிசி வணிகர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தால் ஆலைகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் குறித்து சேலம் செவ்வாய்பேட்டை நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் ரத்தினவேல் கூறியதாவது: அரிசிக்கு எந்த அரசும் வரி விதித்தது  இல்லை. தற்போது ஒன்றிய அரசு, அரிசிக்கு 5 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி 18ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, சின்னசேலம், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செய்யாறு, விழுப்புரம், காங்கேயம், ஈரோடு, சங்கராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்  மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இங்கு தினமும் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. மொத்த அரிசி வணிகர்கள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு விற்பனை  நடக்கிறது.

போராட்டத்தின் காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் ரூ.600 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 5 சதவீத ஜிஎஸ்டியால், 25 கிலோ சிப்பத்திற்கு ரூ.75 முதல் ரூ.100 வரை விலை அதிகரிக்கும். ஏற்கனவே பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் தினமும்  அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது உணவுப்பொருளான அரிசி விலை ஏறினால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒன்றிய அரசு அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தை தொடர்ந்து, 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆந்திராவிலும் வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: