டி.புதுப்பட்டியில் புது அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டியில் புது அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால், சுற்றுசுவர்கள் பழுதடைந்து விரிசல்விட்டதால் மழைகாலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே உள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் செட்டில் தற்போது தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறையான கழிவறை வசதி இல்லாதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே டி.புதுப்பட்டி கிராமத்திற்கு புதிய அங்கன்வாடி மையம் வேண்டுமென பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: