சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், 32வது பட்டமளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சான்றிதழை வழங்கிய பின்னர், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (பிஐஎம்) புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், டி.வி.எஸ் மோட்டாரின் தலைவர் வேணு சீனிவாசன், பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் ரவி அப்பாசாமி, பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குனர் அசித் கே பர்மா பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் செல்வம், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்த நூற்றாண்டில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக உள்ளது.

நமது முன்னோர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு புதிய இந்தியா வளர்ந்து வருகிறது. 2022ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டுவரை ஒரே ஆண்டில் இந்தியா 21% காப்புரிமை பெற்று தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நேரத்தில் நாம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. செயற்கை நுண்ணறிவு, செயற்கை உயிரியல், குவாண்டம் அறிவியல் போன்ற துறைகளில் இந்தியா கவனம் செலுத்தி வளர்ச்சி பெற்றுவருகிறது.

தற்போது உலக அளவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கொள்கைகளே காரணமாக உள்ளது. சீனாவில் இருந்து பெரிய தொழில் நிறுவனங்கள் (கார்ப்பரேட்) வெளியேறத் தொடங்கியுள்ளன. அவற்றை ஈர்க்க இந்தியா தயாராக இருக்க வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வட மற்றும் தென் பகுதியில் மக்களின் இடப்பெயர்ச்சி இயல்பாக இருந்தது.

ஆனால் அந்நியர்களின் படையெடுப்பிற்கு பிறகு இந்தியாவில் இடப்பெயர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. இடப்பெயர்ச்சியின் போது இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தது.இன்னும் அரை நூற்றாண்டுக்கு நாம் கவனமுடன் உழைக்க வேண்டும்.‘‘இது தான் நேரம், பொன்னான நேரம், பாரதத்தின் நேரம்” (தமிழில் பேசினார்.) இவ்வாறு அவர் கூறினார்.

The post சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: